உங்களது விருப்பம்/தேவை என்ன?

உங்களது விருப்பம்/தேவை என்ன?

உங்களது விருப்பம்/தேவை என்ன? நீங்கள் செய்துகொண்டிருப்பது என்ன?

முதல் கேள்விக்கு பெரும்பாலோனோர் மிகச் சரியாக விடை அளிக்கிறார்கள். அதாவது உங்கள் விருப்பம்/தேவை என்ன என்ற கேள்விக்கு. என்னுடைய தேவை ஒரு பெரிய வீடு, ஒரு கார், உயர்ந்த பதவி, அழகிய வாழ்க்கைத் துணை இப்படி எதோ ஒன்று. தவறில்லை, உங்களுடைய தேவையையோ அல்லது விருப்பங்களையோ எடை போடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதை நீங்கள் அரிய பொக்கிஷமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த கேள்விக்கு விடை சொல்ல நீங்கள் தயாரா? நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்குறீர்கள்? இதற்கும் உங்களிடம் விடை இருக்கும். எல்லோரும் ஏதாவது செய்து கொண்டிருப்போம். நான் குறிப்பிட வந்தது முதல் கேள்விக்கும் இரண்டாவது கேள்விக்கும் உள்ள தொடர்பு பற்றியது. உங்கள் விருப்பங்களை அல்லது உங்கள் தேவைகளை நிறைவேற்ற நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

என்னுடைய தேவை ஆரஞ்சுப் பழங்கள், நான் இப்போது மாங்காய் மரத்தின் அடியில் நின்று கொண்டிருக்கிறேன், என்று நீங்கள் சொல்லமுடியுமா?

அதைத்தான் நாம் செய்துகொண்டு இருக்கிறோம். கஷ்டமாக இருக்கிறதா? என்னுடைய கேள்வி? தப்பில்லை உங்களுடைய பதில் மாங்காய்களை சேமித்து விற்று, அதில் வரும் பணத்தை வைத்து ஆரஞ்சுப் பழங்கள் வாங்கப் போகிறேன், என்று இருந்தால், நான் அதை வரவேற்கிறேன். ஏனெனில் நீங்கள் உங்களது தேவைக்கும், நீங்கள் செய்து கொண்டு இருக்கும் வேலைக்குமான தொடர்பு புள்ளியில் நிற்கிறீர்கள்.

நீங்கள் ஒன்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

செய்த வேலையையே மீண்டும், மீண்டும் செய்து கொண்டிருந்தால் அதற்குறிய பலன்தான், மீண்டும், மீண்டும் கிடைத்துக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு அதிகமாக பலன் வேண்டுமென்றால், நீங்கள் அதிகமாக செய்யவேண்டியது இருக்கும், அல்லது இன்னொரு மாற்று வழியைக் கையாள வேண்டியது இருக்கும். எப்படி நான் என்னுடைய தேவையையும் என்னுடைய செயலையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைப்பது? எப்படி தொடர்புக்குள் கொண்டுவருவது?

என்னுடைய நண்பர் ஒருவர், தினமும் காலை அரை மணி நேரம் தியானம் செய்கிறார். இந்த அவசர யுகத்தில் தினமும் அரைமணி நேரம் என்பது பெரிய விஷயம், அவரைப் பாராட்டலாம். மேலும் காலை, மாலை இரு வேலைகளிலும், அரைமணி நேரமாவது பிராத்தனை செய்கிறார். சரி, அது அவருடைய இஷ்டம், அவருக்கு அது மன அமைதி கொடுக்கிறது, தப்பில்லை.

அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவருக்கு மின்னஞ்சல்களை கையாளும் வேலை. அவருக்கு ஒரு பெரிய குறை என்னவென்றால் ஆங்கில அறிவு குறைவாக இருப்பதுதானாம். ஆங்கில அறிவு இன்னும் கொஞ்சம் இருந்தால் அவர் எங்கேயோ சென்றிருப்பாராம். இதை கடந்த ஐந்து வருடங்களாக நண்பர்களிடம் சொல்லிப் புலம்பிக்கொண்டு இருக்கிறார். அவருடைய ஆங்கில அறிவை மேம்படுத்துவற்கு அவருக்கு நேரம் கிடைப்பது இல்லையாம்.

தியானம் செய்தாலோ, பிரார்த்தனை செய்தாலோ ஆங்கில அறிவு வந்துவிடும் என்று யார் சொன்னது என்று தெரியவில்லை. ஒருமணி நேரம் அதற்கு செலவிடும் நேரத்தில், ஒரு அரை மணி நேரம் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு ஒதுக்கி இருந்தால் இந்த ஐந்துவருடத்தில் அவர் சொன்னது போல் அவர் எங்கேயோ போயிருக்கலாம். எனக்கு ஒரு கவிதை ஞாபகம் வருகிறது,

தினமும் செய்கிறேன்

    தியானம்

    மாற்றமில்லை மனதில்

   

    காலை மாலை தவறாமல்

    கடவுளை வணங்குகிறேன்

    கடுகளவும் பிரயோஜனம் இல்லை

   

    செய்வதற்கு இன்னும்

    என்ன உள்ளது

    உங்களது கேள்விக்கு

    என்னுடைய கேள்வி

   

    ஒரு முறை

    இயற்கை கொடுத்திருக்கும்

    மூளையை நீங்கள்

    உபயோகப்ப் படுத்துவதில்

    உங்களுக்கு ஏதேனும் சிரமம் உள்ளதா?

உங்களைக் கிண்டல் செய்வதற்காக இதைச் சொல்லவில்லை, நீங்கள் உங்களது தேவைக்கும், நீங்கள் செய்து கொண்டு இருக்கும் வேலைக்குமான தொடர்பை எப்படி அமைப்பது என்பது தெரியாமல் இருக்கிறீர்கள் அவ்வளவுதான்.

விரும்புவதை அடைவதற்கு, தினமும் ஒரு அரை மணி நேரமாவது ஒதுக்கி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். உங்களுடைய ஒவ்வொரு நாளும்தான் உங்களுடைய நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது.

ஒரு பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை விட, நாம் இதெல்லாம் செய்யாமல் விட்டு விட்டோமே என்பதுதான், நம்மில் பெருமபாலோருடைய புலம்பலாக இருக்கும்.

ஆக மிக எளிதாகச் சொல்வதென்றால்

உங்களுக்கு ஆரஞ்சுப் பழம் வேண்டுமென்றால் மாங்காய் மரத்தைத் தேடிப் போகாதீர்கள்.

Share This Post