ஏதோ காரணம் இருக்கு…..

ஏதோ காரணம் இருக்கு…..

முதலில் நம்முடைய தேடல் அந்தகாலத்தில் தீப்பட்டி படங்களில் ஆரம்பித்தது, இப்போது சிறுவர்கள் ஸ்க்ரீன் சேவர்களுக்கு ஹீரோக்களின் படங்களை தேடுகிறார்கள். பின்பு நல்ல படிப்பு, வேலை, துணை, பணம், வசதி வாய்ப்புகள் என்று தேடுகிறோம். பிறகு ஆன்மிகம், குரு கடவுள் என்று தேடி இறுதியில் நாம் பிறந்த காரணத்தை தேடுகிறோம். கொஞ்சம் வித்தியாசமாக சிலர் நாம் இன்னும் எதற்கு இங்கு (இன்றும்!?) இருக்கிறோம் என்று தேடுகிறார்கள்.

இன்னும் பெருசு (தாத்தா) இருந்துக்கிட்டு இம்சையை கொடுக்குதா? என்று சென்னையிலிருக்கும் சாப்ட்வேர் எஞ்சினியரான எனது பக்கத்து வீட்டுகாரருடைய மகன் வரும்போதெல்லாம் கேட்பான். சென்றவாரம் அவன் சென்னையில் ஒரு சாலை விபத்தில் உயிர் இழந்தான். அந்த செய்தியை கேட்டு அந்த ‘ பெருசு’ சொன்னது “வயசான காலத்தில் என்னைய கொண்டுபோய் இருக்கலாம் அந்த யமன் பாவம் வாழுற வயசில் என்னுடைய பேரனை கொண்டுபோய்ட்டானே என்று புலம்பியது.

ஒருமுறை இளையராஜா, s.p. பாலசுப்ரமணியன், கங்கை அமரன் மூவரும் இவ்வளவு பிரபலம் ஆவதற்கு முன்னர் ஒரு காரில் சென்றபோது ஒரு விபத்தை சந்தித்தனர். ஆனால் மூவரும் அதிர்ஷ்டவசமாக அந்த விபத்தில் இருந்து தப்பினர். அப்போது இளையராஜா சொன்னாராம் “நாம் உயிர் பிழைத்திருக்கிறோம் என்றால் நம்மை ஏதோ ஒரு காரணத்திற்காக இறைவன் விட்டுவைத்திருக்கிறான் என்று அர்த்தம்என்று சொன்னாராம். அது என்னவென்று நமக்கு தெரியும்.

டாக்டர் சம்மேர்வேல் என்பவர் எவரெஸ்டில் ஏற முயற்சி செய்தபோது பனிச்சரிவில் அவருடன் வந்த ஏழு பேரும் விபத்தில் இறந்தபோது அவருக்கு தாங்கமுடியாத அழுகை வந்ததாம் “இறைவன் என்னை ஏன் விட்டுவைத்தான்? என்று. அவர் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்தாராம். ஆனால் கேரளாவில் ஒரு மருத்துவமனைக்கு அவர் சென்றபோது அங்கு ஐந்நூறு நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர்தான் இருந்தாராம். உடனே தன்னுடைய தேவையை அவர் உணர்ந்து அவருடைய சொத்தையெல்லாம் விற்று ஒரு நல்ல மருத்துவமனை கட்டி அங்கேயே இலவசமாக பணியாற்றினாராம். அவர் அந்த விபத்தில் ஏன் உயிர் பிழைத்தார் என்று உணர்ந்து கொண்டாராம்.

இப்படி நிறைய உதாரணங்கள் கூறிக்கொண்டே போகலாம். இதற்கு அறிவியல் ரீதியாகவோ, தத்துவ ரீதியாகவோ காரணம் சொல்லமுடியாது. ஆனால் ஏதோ காரணம் இருக்கு என்று உறுதியாக நம்பவேண்டும். எவ்வளவோ கஷ்டங்களுடன் படுத்த படுக்கையாகக்கூட சிலர் இருக்கின்றனர். ஸ்ட்டீபன் ஹாக்கின்ஸ் ஒரு மிக சிறந்த உதாரணம். மின்னல்வேகத்தில் இதயமாற்று அறுவை சிகிச்சை மூலம் சிலர் உயிர் பிழைக்க வைக்கப்படுகிறார்கள். இதற்கு எத்தனை பேர் சம்மதம் வேண்டும், எத்தனை பேருடைய மின்னல்வேக செயல் வேண்டும், எவ்வளவு சாதகமான சூழ்நிலை வேண்டும்? ஆனால் இது நடக்கிறது என்றால் ஏதோ காரணம் இருக்கிறது.

நாம் இந்த நாளை இப்பொழுது அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் என்றால் ஒரு வலுவான காரணம் இருக்கிறது என்று அர்த்தம். நம்மால் இந்த உலகத்தில் ஆகவேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன என்று அர்த்தம். இந்த பிரபஞ்சம் நம்மிடமிருந்தும் உதவி எதிர்பார்க்கிறது என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டு நம்முடைய முக்கியத்துவத்தை உணர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும். ஏனெனில் ஏதோ காரணம் இருக்கு…

Share This Post