கபாலி ரசிகனுடன் ஒரு நேர் காணல்

கபாலி ரசிகனுடன் ஒரு நேர் காணல்

நிருபர்: வணக்கம், நேரிடையாக விஷயத்துக்கு வருவோம்

ரசிகர்: மகிழ்ச்சி

நிருபர்: படம் வருவதற்கு முன் ஏன் அவ்வளவு ஆர்ப்பாட்டம்?

ரசிகர்: இது எங்கள் திருவிழா, அதுதான் இந்த கொண்டாட்டம்

நிருபர்: உங்கள் கொண்டாட்டம் உங்களுடுனேயே இருக்கலாமல்லவா? முக நூல், வாட்ஸ் அப் எங்குபார்த்தாலும் உங்க அட்ராசிட்டி தாங்க முடியலேயே?

ரசிகர்: வருடம் முழுவதும் உங்க அட்ட்ராசிடிய விடவா? இப்போது குற்றாலத்தில் நான், மெட்ரோ ரயில் பயணத்தில் நான், இப்படி நீங்கள் போடும் அப்லோடு?! உங்களுடைய மொக்க கவிதை, பலதடவை படித்த ஜோக்கை பார்வேர்ட் பண்றீங்க?! உங்க குடும்ப போட்டாவைப் போட்டு பயமுறுத்துறீங்க, இதை ஷேர் பண்ணுங்க பத்து நிமிசத்துல நல்லது நடக்கும்னு ஜோசியம் சொல்றீங்க, இதெல்லாம் காலம் முழுவதும் நாங்க சகிச்சுகிறோம்ல? எங்க தலைவர் படம் வரப்போ ஒரு பத்துநாள் நாங்க போடுறத ரசிக்கமாடீங்களா?

நிருபர்: நாட்ல எவ்ளோ பிரச்சினை இருக்கு இப்போ இது தேவையா?

ரசிகர்: நாட்ல உள்ள பிரச்சினைகள் எல்லாம் பார்க்கிறது ரஜினி ரசிகர்கள் வேலை இல்ல, அது அரசாங்கதோடா வேலை இல்லைனா ரஜினி எதிர்ப்பாளர்கள் நீங்க அந்த பிரச்சினை எல்லாம் பாக்க வேண்டியது தானே

நிருபர்: கபாலி உங்களுக்கு என்ன கொடுக்குது?

ரசிகர்: நீங்க தீபாவளி, பொங்கல் கொண்டாடுறீங்கல்ல, அது என்ன கொடுக்குது உங்களுக்கு?

நிருபர்: அது மகிழ்ச்சி கொடுக்குது.

ரசிகர்: அதேதான் கபாலி எங்களுக்கு கொடுக்குது.

நிருபர்: உங்க தலைவர் உங்களுக்கு என்ன செய்தாரு?

ரசிகர்: அவரு எங்களுக்கு என்ன செய்தாருன்னு நாங்க சொல்றதுக்கு முன்னாடி நான் உங்கட்ட ஒரு கேள்வி கேக்குறேன், சொல்லுவீங்களா?

நிருபர்: கேளுங்க

ரசிகர்: உங்க கோபம் ரஜினி மேலயா?, இல்ல ரஜினி ரசிகன் மேலயா?

நிருபர்: ரெண்டுபேரு மேலயும்தான்.

ரசிகர்: மகிழ்ச்சி, சரி உங்கள்ள ஒருத்தரு மெஸ்சிக்கோ, டெண்டுல்கருக்கோ வைரமுத்துவுக்கோ, பிடரல் காஸ்ட்ரோக்கோ, புல்லின் மீதுள்ள ஒரு சொட்டு பனிக்கோ, ஸ்கூட்டியில் செல்லும் ஒரு ஆன்டிக்கோ, மலர் கம் நடிகை ரோஜாவுக்கோ ரசிகனா இருக்கலாம், இவர்கள் பிளஸ் இவைகள் உங்களுக்கு என்ன செய்றாங்களோ அதான் ரஜினி எங்களுக்கு செய்யுறாரு.

நிருபர்: உங்க ரஜினி சமீபத்திய சென்னை வெள்ளத்துக்கு பத்து லட்சம்தான கொடுத்தாரு? அதிகமாகவே கொடுத்திருக்கலாமே?

ரசிகர்: நதி இணைப்பிற்கு ஒரு கோடி டெபாசிட் பண்ணிருக்காருன்னு உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியும், உங்களிடம் கஷ்டப்படுற ஒருத்தரு உதவி கேக்குறாருன்னா அவருக்கு உதவி செய்யுறது, எவ்வளவு செய்யுறதுன்னு முடிவு எடுக்குறது உங்க தனிப்பட்ட விஷயம். அதை விமர்சனம் செய்யுறது அநாகரீகமான செயல்னு உங்களுக்கு தோணலையா? கமலஹாசன் சொன்னதுமாதிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது ஆட்சியில் உள்ளவர்கள். அவர்களைக் கேக்கமுடியவில்லை உங்களால்.

நிருபர்: ரஜினி இங்க சம்பாதிச்ச பணத்தையெல்லாம் கர்நாடகாவில் முதலீடு செய்யுறாராம், அதைப் பற்றி?

ரசிகர்: தமிழ் நாடு முழுவதும் இருந்து வந்து சென்னைல வேலை பாக்குறவுங்க சென்னைல மட்டும்தான் முதலீடு செய்யணுமா? இல்லை மும்பை டெல்லி வெளிநாடுகள்ள வேலை பாக்குற தமிழர்கள் அவர்கள் சம்பாதித்த பணத்தை அங்குதான் முதலீடு பண்ணனுமா? ரஜினி படம் பிரான்ஸ், ஜப்பான் ஓமன்னு பல வெளிநாடுகள்ள நல்லா ஓடுது அப்படின்னா அங்க சம்பாதிச்ச பணத்தை அவரு அங்கதான் முதலீடு செய்யனுமா? கொஞ்சம் சென்சோட பேசுங்க ஒருத்தரு சம்பாதித்த பணத்தை அவரு எங்க முதலீடு பண்ணனும்னு முடிவு பண்றது நாம இல்லை.

நிருபர்: கபாலி எதிர்பார்த்தபடி அவ்வளவு ஹிட் இல்லையாமே?

ரசிகர்:  அதை விநியோகஸ்த்தர் சொல்லணும் அவங்க ஒன்னும் புலம்பலேயே? அப்படின்னா படம் நல்லா போகுத்துன்னுதான அர்த்தம். கபாலி படம் எப்படியாவது தோல்வி அடையணும், அப்பதான் நீங்க ரஜினி மேல, ரஜினி ரசிகர் மேல கோபப்பட்டதெல்லாம் நியாப்படுத்த முடியும், அப்படித்தான? மன்னிக்கவும் தியேட்டர்ல போயி முழு படத்தையும் பார்த்துட்டு அதை சொல்லுங்க, கபாலிய விமர்சனம் பண்றவங்களும், ரஜினியோட நேர்மைய விமர்சனம் பண்றவங்க நெறயபேரும், சட்டத்துக்கு விரோதமா திருட்டு வி சி டில படம் பார்த்துட்டு பேசுறீங்க.

நிருபர்: அநியாயமா கட்டணம் வாங்குனா நாங்க என்ன பண்றது?

ரசிகர்: இப்பொழுது கட்டணம் நூறு ரூபாதான், இப்ப தியேட்டருக்கு போகலாம்ல? படம் வந்தவுடன் போகனும்னு உங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லையே? நாங்க ரசிகர்கள், நாங்க கூடுதல் கட்டணம் கொடுத்து கூட படம் வந்தவுடன் பாப்போம் அது எங்க பிரச்சனை அதை நாங்க பார்த்துக்கிறோம், எங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி உங்களுக்கு ரஜினி மேல உள்ள வெறுப்பைக் காட்டுறீங்க, அவ்வளவுதான்.

நிருபர்:  சோ, நீங்க எல்லாத்தயும் நியாப் படுத்துறீங்க? உங்களுக்கு இது வெறித்தனமா தோணலயா?

ரசிகர்: ரசனைனா என்ன? ரசனையின் அளவு எவ்வளவுன்னு ஏதாவது ஒரு வரைமுறை இருக்கா? நீங்க இந்த வண்ணத்துப் பூச்சிய இவ்வளவுதான் ரசிக்கணும், அதைப் பற்றி இவ்வளவுதான் பேசணும்னு ஏதாவது ஒரு வரைமுறை இருக்கா? என்னன்னே புரியாமல், பக்கத்துல உள்ளவன் தப்பா நெனச்சுக்குவானு மாடர்ன் ஆர்ட்டல்லாம் ரசிக்கிறீங்க? ஆனால் வாடிப்பட்டி கொட்டுக்கு நாடி நரம்பெல்லாம் நம்மையறியாமல் ஆட்டம் போடும், அதை மறைச்சு வைக்க போராடுவீங்க? அதான் உங்க ரசனை? நாங்க அப்படியே வெளிப்படுத்துறோம் யாருக்கும் பாதிக்காமல், இது வெறின்னா நாங்க மகிழ்ச்சியா ஒத்துகிறோம், நாங்க ரஜினி வெறியன்தான்.

நிருபர்: மகிழ்ச்சி

ரசிகர்: மகிழ்ச்சி!

 

Share This Post