கேள்வியும் நானே பதிலும் நானே…

கேள்வியும் நானே பதிலும் நானே…

ஒருவரின் உண்மையான பலத்தை எப்போது உணரலாம்?

அவர் நன்றாக இழுத்து மூடி தூங்கும்போது அவரது போர்வையை இழுத்தால் உணரலாம்.

நம் நாடு வளமான நாடாவது எப்போது?

வயிறு குறைவதற்காக ஓடுவோரின் எண்ணிக்கை, வயிறுநிறைவதற்காக ஓடுவோரின் எண்ணிக்கையை விட அதிகமாகும்போது.

இந்தப் பெண்தான் என் எதிர்காலம் என்று ஒரு ஆண் உணர்வது எப்போது?

அந்தப் பெண் அந்த ஆணின் கடந்த காலத்தை மறக்கடிக்கும்போது.

ஏதேனும் ஒரு கெட்ட பழக்கத்தை விட நினைத்தால் எதை விடலாம்?

எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் பொய் சொல்லாமல் இருந்து பாருங்கள், மற்ற கெட்டபழக்கங்கள் தானாகவே அகலும்.

எல்லா மனிதர்களிடமும் உள்ள பொதுவான பழக்கம் எது?

யாரேனும் பணத்தை எண்ணும்போது நாமும் கூடவே எண்ணுவது.

என்னை காலுக்கு கீழே உள்ள செருப்பாக நினைப்பவர்களை நான் என்ன செய்வது?

உங்கள் தலைக்கு மேல் உள்ள விஷயமாக (முடி) அவர்களை மதித்து விட்டுவிடுங்கள்.

மக்களின் தேவைகளை அரசியல்வாதிகள் எப்போது நிறைவேற்றுவார்கள்?

இருதரப்பினற்கும் உள்ள இடைவெளி குறையும்போது. ஒருநாள் ஏதேனும் ஒரு அரசியல்வாதியை சாதாரண மனிதனைப்போல, வழக்கமாக மக்கள் பயணிக்கும் சராசரியான சாலையில், அரசுப்பேருந்தில் அடைமழையிலோ, கொளுத்தும் வெயிலிலோ கூட்ட நெரிசலில் அனுப்பினால், பின் நமது நிலையை அவர்கள் உணர வாய்ப்புகள் அதிகம்.

கோபத்தை அடக்கலாமா?

வேண்டாம், அடக்கப்படும் கோபம் வெறியாகும், முடிந்தால் தேவையற்ற கோபத்தை தவிருங்கள்.

இந்த உலகத்தில் பிழைக்கத்தெரிந்தவன் யார்?

தனது மனைவி சொன்ன வேலையை, அவள் சொன்னதை விட சிறப்பாக செய்யும் திறமை இருந்தும், அதை அவ்வாறு செய்யாமல், மனைவி சொன்னவாறே செய்பவன்.

சிறுவர்கள் உலகில் உள்ள ஏழு அதிசயங்கள் என்ன?

திட்டாத அம்மா,

அறுக்காத ஆசிரியர்,

தொலையாத பென்சில்,

சீக்கிரம் விடுகிற பள்ளிக்கூடம்,

வீட்டுப்பாடம் இல்லாத லீவு நாள்,

பட்டப்பெயர் வைக்காத நண்பன்,

படிக்கச்சொல்லி அதட்டாத அப்பா.

Share This Post