சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

பாகம் 1:  (சூன்யத்தைக் கூட ஒன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கு?!)

ரயிலில் ஏறி அமர்ந்தேன். என்னுடன், என்னுடைய நிழலாய் என்னுடைய நண்பனாகவும், உதவியாளனாகவும், சிலசமயங்களில் என்னுடைய மனசாட்சியாகவும் என்னை இம்சைபடுத்துகிற சத்யன்.

என்னுடன் சேர்ந்தவுடன் அவனையும் அவனுடைய வீட்டில் தண்ணீர் தெளித்துவிட்டார்கள். எனக்கு இல்லாத மனைவியை அடிக்கடி ஞாபகப்படுத்துவான், அவ்ளோ இம்சை! பிறகு எதற்கு என்னுடன் என்கிறீர்களா? நான் உளறுவதை அவன்தான் வாயைப் பிளந்து கேட்பான். ஒரு அடிமை சிக்கிட்டான் என்ற ஆனந்தம் எனக்கு. சமயத்தில் கழுவியும் ஊத்துவான், என்னையும், நான் குடிச்ச டம்ப்ளரையும்.

“எங்கே பாஸ் போகிறோம்?” என்றான், ரயிலில் ஏறுவதற்கு முன்பு. “எங்க போகிறோம் என்பது முக்கியமில்லை, போகிறோம் என்பதுதான் முக்கியம் என்றேன். ராஜேந்திரகுமார் எழுத்தில் வருவதுபோல “ங்ஞே” என்று முழித்தான். ஆரம்பிசுட்டாருடா என்று அவன் நினைப்பது மைன்ட் ரீடிங்கில் தெரிந்தது.

எனக்கு எதிரில் அமர்ந்து இருந்த ஒரு யுவதி “சாப்ட்டேன்….ரெண்டு இட்லி…ம்ம்…” என்று செல்லிடைபேசியில் அவளுக்கே கேக்காத குரலில் சொல்லிக்கொண்டு இருந்தாள். இப்போதுதான் அரம்பிச்சிருக்கும்போல அதான் எதிர்முனையில் அவனுடைய ஆள் சாப்டியா என்று அக்கறையாய் விசாரிக்கிறான். சத்யன், “பாஸ் இது லவ்வு பாஸ் உங்களுக்கு புரியாது விடுங்க” என்றான்.

“நட்பா இருக்கக்கூடாதா” என்று சத்யனுக்கு அருகிலிருந்து ஒரு குரல் வந்தது. இருவரும் ஒரு சேர அவரைப் பார்த்தோம், ஐம்பது வயது, நல்ல தேஜஸ், அளவான சிரிப்புடன் கையில் எங்கே கடவுள் என்ற புத்தகம், எங்களை நட்பாய் பார்த்தார்.

ஆகா நமக்கு ஒரு ஆள் கிடைச்சுட்டாரு என்று சத்யனைப் பார்த்தேன் அவனும் “எப்படியும் நீங்க ரெண்டு பேரும் கொலையா கொல்லப்போறிங்க, நான் எதுக்கு நடுவுல” என்று என்னுடைய இடத்தில் மாறி அந்த யுவதிக்கு எதிரில் உட்கார்ந்தான். நான் அவருக்கு அருகில் அமர்ந்தேன்.

அவரு, அவரு என்று சொன்னால் நல்லாருக்காது அவருக்கு ஒரு பெயர் வச்சுரலாம், ‘கடவுள்’ னு வச்சுக்கலாமா?

“ஆணும், பெண்ணும் நட்பாய் இருப்பது கத்தி மேல் நடக்குறமாதிரி சார், சுஜாதாவோட டீன் ஏஜ் கதை படிச்சிருக்கிறீங்களா?, எந்த புள்ளியில் காதலாய் மாறும்னு தெரியாது”, என்றேன். அவர், “நிச்சயமாக! ஆனால் கொஞ்சம்… இல்லை, நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்றார்.

“உங்களுக்கு இரவு சாப்பாடு வேண்டாம் பாஸ், இப்படி ஒரு ஆளு கிடைச்சா சோறு தண்ணி இல்லாமல பேசுவிங்க” என்றான் சத்யன்.

“நீங்க சொல்லுங்க சார் அவன் அப்படித்தான்”, என்றேன், அவர் சிரித்துக்கொண்டே, “ஒருத்தரோட மனசு பிடிச்சிருந்தா அது நட்பு, உடம்பு பிடிச்சிருந்தா அது காமம், மனசும், உடம்பும் பிடிச்சா அதான் காதல், என்றார்.

“அப்ப இது எந்த கேஸ் சார்” என்றான் சத்யன், யுவதியை கண்ணால் காட்டி. அது, அதைப் பற்றித்தான் இங்கே ஒரு மேட்டர் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று தெரியாமல் செல்லில் தொடர்ந்து கொண்டு இருந்தது.

“எதுவாய் இருந்தாலும் நம்முடைய பிறப்பின் காரணத்தை நிறைவேற்றி கொண்டு இருக்கிறது, நம்மைப்போல அந்த பெண்ணும்”, என்றார் கடவுள்.

“பிறப்பின் காரணமா?!, என்ன சார் அது? இப்பிடி பொசுக்குனு சொல்லிட்டீங்க?, நாங்க தேடி போற விஷயத்துல இதுவும் என்னோட லிஸ்டில் இருக்குது, தேடல் பயணத்தை ஆரம்பிக்கும்போதே எனக்கு ஒரு தேடலுக்கு விடை கிடைச்சிரும்போல இருக்கே”. என்றேன். “பாஸ் லிஸ்டா!, சொல்லவே இல்லை”, என்று அலறினான் என்னுடைய நிழல்.

“சும்மா இருடா, ஒரு ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்தால் கூட எனக்கு உடனே கிடைக்காது, இந்த அரசாங்கமே எனக்கு எதிரா சதி பண்ணி என்னைய அலையா அலைய விட்டுத்தான் கொடுப்பாய்ங்க! அப்படி ஒரு ராசி எனக்கு, நான் கல்யாணம் பண்ணாம இருக்குறதுக்கு கூட இது ஒரு காரணம், எனக்கு மண்ணெண்ணையே ஈசியா கிடைக்காது எனக்கு எப்படி மனைவி கிடைப்பா? ஆனா இப்ப என்னோட ஒரு கேள்விக்கு விடை கிடைக்கபோதுன்னு தோணுதுடா” என்றேன்.

“நீங்க சொல்லுங்க சார் பிறப்பின் காரணத்தை”, என்றேன் ஆவலாக.

அவர் சொன்ன பதிலில் முதலில் அதிர்ச்சியும் பிறகு ஆயிரம் கேள்விகளையும் எழுப்பியது. அதான! அவ்வளவு ஈசியாவா நமக்கு தேடுனது கிடைக்கும்? நம்ம ராசி அப்படி! அவர் சொன்ன காரணம் அடுத்த பாகத்தில்….

முன்னுரை படிக்க

Share This Post