சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-10

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-10

பாகம் 10: (சூன்யத்தைத் தேடி…..)

                        ஆக ஜோசியம்னா வேற வழியில்லாம ஏத்துக்கணும்னு சொல்றீங்களா”, என்றாள், அனாமிகா.

“நான் அப்படி சொல்லல, கடவுள், பேய், காதல் மாதிரி ஜோசியமும் விவாதத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால் துல்லியமாக கணிக்கவோ அளக்கவோ இன்னும் அதுக்கு ஒரு கருவி கண்டுபிடிக்கலை. ஆனால் நம்ம மனித இனத்தோடவே பயணம் செய்கிறது”. என்றார் கடவுள்.

“எனக்கு இன்னும் ஒரு திருப்தி வரல சார் உங்க பதில்ல”, என்றேன்.

உடனே கடவுள் இதுக்கு ஒரு முடிவு கட்டும் விதமாக உறுதியான குரலில் ஆரம்பித்தார், “ஜோசியம் என்பது எதைக் குறிக்கிறது?”, என்றார். உண்மையில் சொல்லப் போனால் முக்காலத்திலும் நடப்பதை குறிக்கிறது இல்லையா?, ஆனால் நாம் பெரும்பாலும் எதிர்காலத்தைப் பற்றி குறிப்பதே ஜோசியம் என்று நினைக்கிறோம், அப்படியே எடுத்துக் கொள்வோம், ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ என்ன நடக்கும் என்று கணிக்கும் ஒருவர், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் என்ன நடக்கும் என்று கணித்து எப்போது சொல்வாரோ அப்போது நான் ஜோசியத்தை நம்புகிறேன், அப்படி யாராவது உலகத்தின் எந்த மூலையிலாவது இருக்கிறாரா சொல்லுங்கள்”, என்றார்.

பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 25 காசுகள் குறைகிறது என்று செய்தி வந்தவுடன் ஒருவருக்கொருவர் பார்ப்போமே அதேபோல் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

“தலைவா பட்டய கிளப்புறீங்க, ஒரு மணி நேரத்தில் வேண்டாம், ஒரு நாளைக்குள் அதாவது அடுத்த 24 மணி நேரத்துக்குள் என்ன நடக்கும் என்று உலகின் மிகப் பெரிய ஜோதிட மாமணி, ஜோதிட சிகாமணிட்ட கேட்டால் துண்டக்காணோம், துணியக்காணோம்னு ஓடிருவாய்ங்க”, என்றான் சத்யன்.

இப்போது எனக்கு கொஞ்சம் தெளிவு வந்ததோ இல்லையோ, இந்த உலகில் ஒரு கருத்தை நிரூபிப்பது என்றால் நாம் எவராலும் மறுக்க முடியாத ஒரு சான்றை தரவேண்டும் இல்லைனா பருப்பு வேகாது என்று புரிந்தது.

எதிலும் தேடத் தேட ஏதாவது ஒன்னு கிடைக்கும் போல என்ற எனது மைன்ட் வாய்ஸ் எல்லாருக்கும் கேட்டுவிட்டது போல, “என்ன தேடி வந்தீங்க?” என்று கடவுள் கேட்டவுடன் தான் புரிந்தது என்னையறியாமல் வாய்சே கொடுத்திருக்கிறேன் என்று.

“அவரு தேடுறதே என்னனு, தேடிக் கண்டுபிடிக்கணும் முதல்ல”, என்றான் சத்யன். “இதுல நான் வேற அவருக்கு கூட்டாளி”, என்று தன்னையும் ஒரு ஜீனியஸாகவோ முட்டாளாகவோ காட்டிக்கொள்ள முயன்றான்.

“நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்றீங்களா யாராவது?”, என்று கடவுள் கேட்டார்.

கோ எட் டில் ஆசிரியர் இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்டால், என்ன கேள்வியாக இருக்கும், அதற்கு நமக்கு பதில் தெரியுமா தெரியாதா என்று கொஞ்சமும் யோசிக்காமல் முதலில் உயரும் கை மாணவியுடையதாகத்தான் இருக்கும் என்று நிருபிப்பதைப் போல அனாமிகா, “நான் சொல்றேன் சார்”, என்றாள்.

கடவுள் அவளை நோக்கி ஆரம்பித்தார்,

கடவுள்: “நீ யார்?”

அனாமிகா: “அனாமிகா”

கடவுள்: “அது உன்னோட பேரு, நீ யாரு?”

அனாமிகா: “கல்லூரி மாணவி”

கடவுள்: அது உன்னோட படிப்பு, நீ யாரு?

அனாமிகா: “ஒரு பெண்”

கடவுள்: “அது பாலினம், நீ யாரு?”

அனாமிகா: “மனிதன்”

கடவுள்: “அது உயிரினம், நீ யாரு?”

அனாமிகா: “தெரியல”

“இத முதல்லயே சொல்லிருக்கலாம்ல. எந்தப் பெண்ணும், எந்தக் கேள்விக்கும் தெரியலைன்னு ஒரு பதிலை சொன்னதா சரித்திரமே இல்லை”, என்றான் சத்யன்.

“நீங்க சொல்லுங்க சார், நீங்க யாருன்னு”, என்றேன். எங்கே அடுத்து நம்மிடம் இது மாதிரி ஏதாவது கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில்.

கடவுள் சொன்னார், “இதைத்தான் நாம் தேடிக்கிட்டு இருக்கிறோம். சிலர் அவங்களை அறியாமல் தேடுகிறார்கள், சிலர் உங்களை மாதிரி இதையே ஒரு வேலையா எங்காவது தேடிப் பார்ப்போம்னு கிளம்பிவந்துறீங்க”, என்றார்.

“அதுல ஒன்னும் தப்பில்லைல”, என்றேன்.

“தப்பில்லை, நீங்க எதையாவது தேடி ஒரு அறைக்குள் போயிட்டு, என்ன தேடி வந்தோம்னு தெரியாமல் திரும்பிருக்கீங்களா”, என்றார். “ஒரு சில தடவை”, என்றேன். “ஒரு நாயோட மொத்த வாழ்க்கையே அப்படித்தான் என்று அதிரவைத்தார்.

“புரியலை”, என்றாள் அனாமிகா.

“ஒரு நாய், ஒரு தெருல வேகமா ஒரு பக்கம் போகும், ஒரு எல்லை வரை போயி எதற்கு வந்தோம்னு தெரியாமல்  அப்புறம் திரும்பி அதே பக்கம் எதிர் திசையில் போகும், இப்படித்தான் முழு வாழ்க்கையுமே அதுக்கு போயிட்டிருக்கும்”, என்றார்.

“அப்படித்தான் நாங்க பயணம் செய்றதும்னு சொல்றீங்களா?”, என்றேன்,

பயணம் செய்தா நிறைய அனுபவங்கள் கிடைக்கும், அதுல நீங்க தேடுனது கிடைக்கும்னு உறுதி இல்லை” என்றவர் தொடர்ந்தார்,

“நீங்க பயணம் செஞ்சா நீங்க தேடுனது கிடைக்கும்னு உங்களுக்கு யாரு சொன்னா? தேடுறத நிப்பாட்டினாதான் தேடியது கிடைக்கும், புத்தர் தேடி அலைஞ்சாரு, ஒரு கட்டத்துல ஒரு மரத்தடில உக்காந்துட்டாரு, அங்கதான் அவருக்கு ஞானம் கிடைச்சது. நிறைய மகான்கள் ஒரு இடத்தில உக்காந்து தியானம் தவம் செய்துதான் அவர்களுக்குத் தேடியதைப் பெறுகிறார்கள்.

மீண்டும் நாயையே உதாரணமா எடுத்துக்குவோம், ஒரு முக்கிய சாலையில் ஒரு நாய் ஒவ்வொரு காரும் போகும்போது அதை துரத்திக்கிட்டே போகும், கொஞ்சதூரத்துல களைச்சுப் போய் திரும்பி வந்துரும், கொஞ்ச நேரத்துல அடுத்த கார் போறப்போ அதை துரத்தும், அந்த நாயை வளர்ப்பவர்ட்ட கேட்டால் அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க, என்னோட கவலை எல்லாம் ஏதாவது ஒரு காரை அது பிடிச்சிருச்சுனா அதை வச்சு அது என்ன பண்ணப் போகுதுன்னுதான் என்றார்”, என்று கடவுள் முடித்தார்.

“நாங்க தேடியது கிடைச்சா நாங்க அதை வச்சு என்ன பண்ணப் போறோமுன்னு கேக்குறீங்களா?” என்றேன், “சொல்லுங்க” என்றார் கடவுள்.

“எங்களுக்கு ஒரு மன நிறைவு கிடைக்கும்ல”, என்றேன். “அப்படின்னா உங்களுக்கு நீங்க தேடுறது கிடைக்கிறது கஷ்டம்தான், ஏன்னா நீங்க எது செஞ்சாலும், உங்களுக்கு எது கிடைத்தாலும் அதை வச்சு இந்த மனித குலத்துக்கு ஏதாவது செய்யணும்னு உங்களுக்கு ஒரு எண்ணம் இருந்தாதான் உங்களுக்கு மன நிறைவு கிடைக்கும்”, என்றார்.

“இந்த வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் சாகிறதில் எனக்கு உடன்பாடில்லை சார்”, என்றேன். “நல்லது, வருகிற ஞாயிற்றுக் கிழமை நீங்க என்ன பண்ணப் போறீங்கனு உங்களுக்கு தெரியுமா? அதுவே தெரியாது இதுல வாழ்வின் அர்த்தம் தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க? சும்மா வாழ்ந்துட்டுப் போங்க சார்”, என்றார் அலட்சியமாக.

நான் தேடி வந்தது இதுவா, நான் தேடி வந்தது சூன்யத்தை அதாவது ஒன்றும் இல்லாதை. எனக்கு அது கிடைச்சிருச்சானு உறுதியா தெரியல, ஆனால் நிறைய கிடைச்ச மாதிரி தோணுச்சு. தேடுதலைத் தொடருவேன், ஏன்னா நான் மனிதன், மனித குலம் ஆரம்பித்த நாளிலிருந்து எதையாவது தேடிக்கொண்டுதான் இருக்கிறோம், நான் மட்டும் விதிவிலக்கா?

“அசையாமல் இருந்தால்

அசைவது புலப்படலாம்

அலைந்து பார்த்தால்

அளந்து பார்க்கலாம்

ஆராய்ந்து பார்த்தால்

அனுபவிப்பது நின்று போகலாம்

அனுபவித்துப் பார்த்தால்

அடங்கலாம்

தேடுபவன் நிறுத்தலாம்

ஆனால் தேடுதல் தொடரும்….

ரயில் ஏதோ ஒரு நிலையத்தில் வந்து நின்றது. சத்யனைப பார்த்தேன், புரிந்துகொண்டான், கடவுளிடம் சொன்னான், “ஓகே சார் நாங்க இறங்கிக்கிறோம், மீண்டும் அதிர்ஷ்டம் இருந்தால் பார்ப்போம்”. கடவுள் கேட்டார், “இதுதான் நீங்கள் இறங்கவேண்டிய இடமா?”, என்றார்.

“இது எந்த இடம்னே தெரியாது, எங்களுக்கு இங்க என்ன கிடைக்கும்னு தெரியாது, இப்படித்தான் எங்கள் பயணம்”, என்றேன். கடவுள் புன்னகையுடன் விடை தந்தார். அனாமிக்காவைப் பார்த்தேன், பார்ப்போம் என்பதுபோல் தலையசைத்தாள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சத்யன் ஒரு சின்ன புன்னகையுடன் அனாமிக்காவிடம் “சி.யு”, என்றான். அவளும் இயல்பாக கையசைத்தாள்.

ரயிலைவிட்டு இறங்கி நிலையத்தைவிட்டு வெளியில் வந்தவுடன் சத்யனிடம், “சாரிடா, நீ அனாமிக்காவிடம் பேசும் விதத்தைப் பார்த்தவுடன், உங்களுக்குள் எதோ உருவாகப் போகிறது என்று தப்பாக நினைத்துக் கொண்டேன்”, என்றேன்.

“விடுங்க பாஸ், இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு, இதெல்லாம் பயணத்துல சகஜம் பாஸ்”, என்றான். இது இதுதான் சத்யனிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது, எதையும் ஜஸ்ட் லைக் தட் என்று எடுத்துக்கொள்வான்.

“பாஸ் உங்க செல்போன்ல சார்ஜ் இருக்கா”, என்றான். “இருக்குது, யாருக்கு கால் பண்ணபோற என்றேன், “அனாமிக்காவுக்குதான் பாஸ்” என்றான் அலட்சியமாக. ‘ங்கே’ என்று விழித்தேன்.

தேடுதல் முடி(யவில்லை)ந்தது.

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-9

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-8

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-7

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-6

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-5

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-4

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-3

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

 

Share This Post