சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

பாகம் 2: (சூன்யத்தைத் தேடி…..)

“பிறப்பின் ரகசியம் ரொம்பப் பெரிய விஷயம் இல்லை”, என்றார் கடவுள். மக்கள் எது ரொம்ப பெரிய விஷயம் இல்லை என்கிறார்களோ அது நிச்சயம் பெரிய விஷயமாகத்தான் இருக்கும் என்று நமக்குத் தெரியாதா? “சொல்லுங்கள்”, என்றேன்.

“காலகாலமாக இந்த பூமிக்கு மனிதர்கள் பிறப்பதற்கு காரணம் இனப்பெருக்கம் செய்வதற்கு, அல்லது அதற்கு துணை செய்வதற்குத்தான் என்றார் கடவுள்.

அதிர்ச்சியை வெளியில் காட்டாமல் “இது ஒரு காரணமா?, எப்படி சொல்கிறீர்கள்?” என்றேன். சத்யன், “இனப்பெருக்கம் செய்வது ஓ.கே, ஆனால் இரண்டாவதாக அதற்கு துணை செய்வதற்கு என்று சொன்னீர்களே, அப்டினா மாமா வேலை பார்க்கிறதா?, என்று நக்கலித்தான்.

“அப்படியும் வச்சுக்கலாம், உனக்குப் புரியும்படி சொன்னால் சினிமாவில், இலக்கியங்களில் கதாநாயகனுக்கு துணையாக ‘நண்பேன்டா கேரக்டர் ஒன்று வருமே அதோட வேலை என்ன? ஒரு ஆணையும் பொண்ணையும் சேர்க்கிறதுதான?” என்றார்.

“சார் நீங்க விளக்கமா சொல்லுங்கள், வெறும் இனப்பெருக்கம் செய்வதற்காகவா வருகிறோம்? சுத்த பேத்தலா இருக்கு, உங்க விளக்கத்த கொஞ்சம் விளக்குங்க”, என்றேன்.

“இந்த உலகத்திற்கு வந்துவிட்டு போகும்போது நீங்கள் எதை விட்டுவிட்டுப் போகிறீர்கள்? உங்கள் சந்ததியைத் தவிர? என்றார்.

“உங்களுடைய முழு வாழ்க்கைப் பயணத்தில் எப்பொழுது உயிர்த் துடிப்புடன், வாழுவதாக உணருகிறீர்கள்? உங்களுக்கு எப்போது வயதுக்கு அதாவது இனப்பெருக்கத்திற்கு தயார் என்ற பருவம் வருகிறதோ அப்பொழுது இருந்து, ‘அதுக்கு நீங்க ‘இனிமேல் சரிப்பட மாட்டீங்க என்ற வயதுவரைதான?

‘வாழ்வுடா என்று எதைச் சொல்கிறீர்கள்? இனப்பெருக்கத்திற்கு ஒருவனுக்கு சந்தர்ப்பம் அமையும்போதுதான?

எப்பொழுது உங்களுக்கு வயசாகிவிட்டது என்ற நினைப்பு வருகிறது? வேலையிலிருந்து ஓய்வு பெறும்போதா? கண்டிப்பாக இல்லை அதன்பின்பும் உங்களால் இனப்பெருக்கத்திற்கு அதாவது ‘அதுக்கு  முடியும் என்றால் நீங்கள் இளமையாகத்தான் உணருவீர்கள், இல்லையா? என்றார்.

அவர் சொன்னதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும் விடாமல் நான், “நம்ம வேற எந்த காரணமும் இல்லாமலா வந்து போறோம்?, இது என்னால ஏற்றுகொள்ளமுடியல சார்” என்றேன்.

“பாஸ் நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே இனப்பெருக்கத்துக்கு….அப்ப நீங்க இந்த பூமிக்கு வந்தது எதுக்கு பாஸ்?”, என்றான் சத்யன். “உன்னோட உயிர வாங்குறதுக்குடா, என்றேன்.

“ஆனா அவன்தான் உங்க உயிர வாங்குறமாதிரி இருக்கு”, என்றார் கடவுள். “போன ஜன்மத்துல அவன் எனக்கு பொண்டாட்டியா இருந்துருப்பான்போல சார்” என்றேன்.

“நீங்க சொல்லுங்க” என்றவுடன் கடவுள் புன்னகையுடன் ஆரம்பித்தார். “நல்லா நிதானமா யோசிச்சுப் பாருங்க, இங்க வரும்போது ஏதாவது கொண்டுவந்தோமா? இல்லையே? இங்க ஏதாவது புதுசா மாற்றத்த உருவாக்கினோமா? அதாவது காற்று, நீர் இதுபோல பிரபஞ்ச தொடர்பான ஏதாவது ஒன்றை உருவாக்கினோமா?, நம்ம முடிஞ்ச அளவு இங்க இருக்கிறத அழிக்கிறோம், நம்ம அழிக்கிறதும் ஒரு உருவத்துல இருந்து இன்னொரு உருவமா மாறுது, அவ்வளவுதான். ஏதாவது விட்டுட்டு போறோமோ? புள்ளகுட்டிய தவிர?,

சுடுகாட்டுல அரைஞான் கயிறை கூட அத்துட்டுதான் விடுறாய்ங்க, என்றான் சத்யன்..

கடவுள் தொடர்ந்தார்,  “ஜீவாத்மா, பரமாத்மா என்கிறார்கள். பரமாத்மா என்பது இந்த பிரபஞ்சம், ஜீவாத்மா என்பது நாம்தான், அதாவது பரமாத்துமால இருந்து ஒரு பிட்டுதான் இந்த ஜீவாத்மா. இந்த ஜீவாத்மா ஜீவன விடும்போது ஒரு ஜீவனையோ அல்லது சில ஜீவனையோ விட்டுதான போகுது, அதாவது சந்ததினு சொல்றோமே அத உருவாக்கிட்டு போகுது”.

“செத்து போறதுனா என்னனு தெரியுமா?”, என்று ஒரு கொக்கியை போட்டார் கடவுள். “பீசாப் போறது, இது தெரியாதா?, என்றான் அறிவுஜீவி சத்யன்.

செத்து போறதுனா சத்துப் போறது, அதாவது நம்ம உடம்பில் உள்ள சத்து கொஞ்சம் கொஞ்சமா போறது. கடைசில சத்து முழுவதும் போய்ட்டா அதுதான் சத்துப்போறது, ஆனா நாம் பேச்சுவழக்கில சத்துப்போறத செத்துப் போறதுன்னு ஆக்கிட்டோம். சத்துங்கறது உயிர்சத்து அதாவது இனப்பெருக்கத்திற்கு உதவும் சத்து. அது குறைய ஆரம்பிக்கறப்பதான் நாம் சாக ஆரம்பிக்கிறோம்.  நம்ம உடம்பு இனிமேல் இனப்பெருக்கத்திற்கு லாயக்கில்லை என்ற நிலைமைதான் அது என்று ஒரு நீண்ட விளக்கம் அளித்தார் கடவுள்.

கொஞ்சம் திருப்தி வந்தது எனக்கு, “இதைக்கூட ஏத்துக்கலாம், ஆனால் இரண்டாவது காரணம் சொன்னீங்கல்ல” என்று நான் சொல்லி முடிப்பதற்கு முன்பு “அந்த மாமா வேலையா பாஸ்? என்றான் சத்யன். “இனப்பெருக்கத்திற்கு உதவுவதையா?” என்று அடுத்த விளக்கத்துக்கு கடவுள் தயாரானபோது ரயில் எதோ ஒரு நிறுத்தத்திற்கு வந்தது. நாமும் இங்கே நிறுத்திவிட்டு மீண்டும் பாகம் 3 இல் மீட்டுவோமா?

சூன்ய வேட்டை தொடரும்…

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

Share This Post