சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-4

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-4

பாகம் 4: (சூன்யத்தைத் தேடி…..)

    கடவுள் என்ற பேச்சை ஆரம்பித்த உடன் எல்லாருடைய முகத்திலும் தௌசன் வாட்ஸ் பல்பு! அதான் இன்னும் கடவுளுக்கு மவுசு இருக்கு. இப்போது எதிர் இருக்கை யுவதி (யுவதிக்கு ஒரு பேரு வச்சுரலாமா?, இதுவரை ஏன் பேரு வைக்கலனு சந்தேகமா?, சந்தேகம்தான் காரணம், ஏன்னா சத்யன்னு பேரு வைக்கும்போது அது யாருன்னு கேக்காத இந்த உலகம் அந்த யுவதிக்கு அனாமிகானு பேரு வச்சா, யாரு பேரை வச்சிங்கனு சந்தேகப்படும்) “தப்பா எடுத்துக்காதிங்க,

கடவுள், காதல், அமானுஷ்ய சக்தி இது மூன்று பற்றியும்,

புத்திசாலிகள் விவாதிக்க மாட்டாங்கன்னு, கேள்விப்பட்டிருக்கேன்” என்றாள்.  “அப்படின்னா நம்ம அதைப்பற்றி பேசலாம் பாஸ்” என்று கடுப்படித்தான் சத்யன்..

அனாமிகா விழுந்து விழுந்து சிரித்தாள். ஒரு இளைஞன் அல்லது இளைஞி எது சொன்னாலும் அருகில் இருக்கும் இளைஞனோ இளைஞியோ கெக்க பிக்கே என்று சிரிக்கனும் என்பது நியுட்டனோட ஐந்தாவது விதி?!

“விவாதிக்க வேண்டாம் ஆனால் கருத்துகளை பகிர்ந்து கொள்ளாலாமே”, என்றேன். “கடவுள் இருக்காறா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் கேள்வி அவர் யார், என்பதுதான், என்றார் கடவுள்.

எப்பவும் இந்த மாதிரி கேள்வி கேட்டால் எதிர் கேள்விதான் பதிலாக இருக்கும். “அவரு யாருனா எந்த அர்த்தத்தில் கேக்குறீங்க?”, என்றாள் அனாமிகா. ஒரு டாக்டர்னா மருத்துவம் செய்கிறவர், ஒரு டெய்லர்னா தைக்கிறவர்னு அவங்க பண்ற தொழில வைத்து அவரு யாருன்னு சொல்வோம்ல அப்ப கடவுள்னா யாரு?”, என்றார் கடவுள்.

இது ஒரு சங்கடமான கேள்விதான், ஆத்திகன், நாத்திகன், ரெண்டும்கெட்டான் இதல்லாம் விட்டுட்டு வெளில வந்து கடவுளை ஆராயும் தைரியம் இங்கு யாருக்கும் இல்லை.

நீங்க சொல்லுங்க என்று என்னிடம் கேட்டார். “அது தெரிஞ்சா நான் ஏன் சூனியத்தை தேடி அலையுறேன்னு” தப்பித்தேன். சத்யனிடம் கேட்டதற்கு “நம்மைப் படைத்தவர்”, என்றான் பொதுஜன ரெப்பு மாதிரி.

அனாமிகாவை பார்த்தபோது “அது நம்புற விஷயமில்லை, உணருகிற விஷயம், என்று ஒரு பழுத்த ஆன்மிகவாதி மாதிரி பேசினாள். “சரி அப்படின்னா எல்லாரும் கடவுளை உணருவாங்களா தங்களுடைய வாழ்நாளில்? என்றார் கடவுள். “இல்லைனுதான் நினைக்கிறேன்”, என்றாள்.

“கடவுளை நம்புறவங்களுக்கும், நம்பாதவங்களுக்கும் உன்னோட வார்த்தையில் சொன்னால் உணர்ந்தவங்களுக்கும் உணராதவர்களுக்கும் வாழ்க்கையில் எல்லாமே ஒரே மாதிரிதான் நடக்கிறது இல்லையா? அதாவது ரெண்டு பேருமே, சுகம் துக்கம், பிறப்பு இறப்பு, மானம் அவமானம், என்று எல்லாத்தையும் எதிர்கொள்கிறார்கள் இல்லையா? கடவுளை நம்புறவங்களுக்கு ஏதாவது மாத்தி நடக்குதா? என்று யோசிக்கவைத்தார் கடவுள்.

“கடவுள்னா கடந்து போவது, அதாவது இன்பம் துன்பம் எது வந்தாலும் ஆடவும் செய்யாமல் அழுகவும் செய்யாமல் கடந்து செல்வது, என்று எங்கோ படித்தேன்”, என்றேன் நான் என் பங்குக்கு.

“நாம் மனிதர்கள், நமக்கு துன்பம் வந்தால் அழனும் இன்பம் வந்தால் சந்தோசப்படனும் என்று படைக்கப்பட்டிருக்கோம். சுருக்கமாகச் சொன்னால், மனிதன் உணர்வு ரீதியான படைப்புதான், அறிவு ரீதியான படைப்பு இல்லை, என்றார் கடவுள்.

“கடவுள் நம்மைக் காப்பத்துறவர்”, என்றான் சத்யன். கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் ஒன்றும் அறியாத குழந்தைகளையே காப்பாற்றாதவர் நம்மைக் காப்பாற்றுவாரா?, என்று கலங்கடித்தார் கடவுள்.

“நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப தண்டனை அல்லது பரிசு தருபவர் கடவுளாக இருக்கலாமோஓஓஒ,,,?” என்று இழுத்தாள் அனாமிகா. “அந்த கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்றது, செய்யாமல் இருப்பது என்ற வினையைத் தவிர வேறு எந்த வினையும் தெரியாது இல்லையா?, என்று இதயத்தில் எதையோ சொருகினார் கடவுள்.

“மழையில் நனையும்போது,

                 அருவியில் குளிக்கும்போது,

                 குழந்தைகளிடம் விளையாடும்போது,

                 பொக்கைவாய் முதியவர்களிடம் பேசும்போது,

                 கன்னிப்பெண்ணை முத்தமிடும்போது,

                 கடல், வானத்தை ரசிக்கும்போது

                 கடவுளை உணருகிறேன் நான்,

என்றேன்.

“அப்படினா அனுபவம்தான் கடவுளா?”, என்றாள் அனாமிகா.

“தீக்குள் விரலை வையுங்கள், அதுவும் அனுபவம்தான். வைத்துவிட்டு சொல்வீர்களா கடவுளை இப்போது உணருகிறேன் என்று?” என்று கூலாக கேட்டார் கடவுள்.

“அது ஒரு சக்தி,” என்றான் சத்யன். காற்றும் சக்திதான், சூரிய ஒளியும் சக்திதான், பூஸ்ட் கூட ஒரு சக்திதான், ஆனால் அந்த சக்தி எப்படி உபயோகமாகிறது என்பதை வைத்துதான் அது சக்தி என்று பெயரிடுகிறோம். கடவுள்ங்கிற சக்தியை வைத்து நாம் என்ன செய்கிறோம்?, என்றார் கடவுள்.

“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர், என்கிறார்களே? கடவுளை உணர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள்?” என்றாள் அனாமிகா. “அப்படினா மரணம்கூட கடவுள்தான். செத்தவன் சொல்லமுடியாது மரணத்துகப்புறம் என்ன நடந்ததுன்னு, உயிரோடு இருப்பவனும் சொல்லமுடியாது மரணத்துக்கப்புறம் என்ன நடக்குமுன்னு” என்றார் கடவுள்.

“நான்தான் முதலிலேயே சொன்னேன்ல நம்மைப் படைத்தவர்தான் கடவுள்னு”, என்றான் சத்யன். “மன்னிக்கவும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை நாம்தான் கடவுளைப் படைத்தவர்கள் என்பதற்கு வேண்டுமானால் ரவி வர்மாவில் இருந்து நிறைய ஆதாரம் இருக்கிறது என்றார் கடவுள்.

“கடவுள் கருணை வடிவமானவர்”, என்று அனாமிகா சொல்லி முடிப்பதற்குள் “கும்பகோணம் என்ற ஒற்றை வார்த்தையில் அவள் வாயை அடைத்தார்.

      “நானும், நீங்களும்தான் கடவுள், என்றேன்.

“நம்மை கடவுளாக உயர்த்தும் அதே வேலையில் கடவுளை சாதாரண மனித ரேஞ்சுக்கு கீழே இறக்கி விடுகிறீர்களே இது நியாமா?” என்று நியாயமாகக் கேட்டார், கடவுள்.

“நீங்க யாரைத்தான் கடவுள்னு சொல்லறீங்க?” என்று எரிச்சலாகக் கேட்டேன்.

“படைத்தல், காத்தல், அழித்தல், சக்தி மூலம், நம்ம செய்யுற வினைகளுக்கேற்ப பலன் கொடுக்கிற ஒன்றை காண்பித்தால் கடவுளாக ஒத்துக்கொள்வீர்களா? என்றார், கடவுள்.

மூன்று பேரும் “சொல்லுங்க பார்ப்போம்” என்றோம். அறிவியல்தான் அது என்று அலட்சியமாக சொன்னார்.

படைத்தல்னு எடுத்துக்கிட்டா உங்க கடவுள்  குழந்தை தருவார், ஆனால் அறிவியல், டெஸ்ட் ட்யூப் பேபி மூலம் அதை சாதிக்குது”, என்று சொல்லி முடிக்கு முன், “ஆண் பெண் இல்லாமல் டெஸ்ட் ட்யூப் பேபி சாத்தியமா?” என்றாள், அனாமிகா.

கடவுள் மட்டும் ஆண், பெண் உதவி இல்லாம வானத்தில இருந்து ஒரு குழந்தையைத் தூக்கியா போடுறாரு?

   “ஒரே மாதிரி ஏழு பேரை கடவுள் படைப்பாங்கனு சொல்றாங்க, அறிவியல் ஒரே மாதிரி ஆயிரக்கணக்கான மனிதர்களை குளோனிங் முறையில் படைக்கும் அப்படினா எது கடவுள்?”

“காத்தல்தான் கடவுள் என்றால் ஆரம்பத்துல மனிதனின் ஆயுள்காலம் முப்பது வருடங்கள்தான், ஆனால் இப்போது அறிவியல் அறுபது வயதுக்கு மேல கொண்டுபோய்ருச்சு. சாதாரண வயித்து வலிக்கே செத்தாங்க, ஆனால் அறிவியல், எமனோடு கைகுலுக்கினவங்களையே திருப்பி கூட்டிட்டு வந்துருது.

“அழித்தலில் சொல்லவே வேண்டாம் இயற்கை பேரழிவுனால எவ்வளவு பேரு சராசரியா சாகுறாங்க ஒரு வருசத்துல? ஆனா இப்ப ஒரு ஹைட்ரஜன் குண்டு போதும் மொத்த மனித இனமே காலி”.

“கேட்கிறதைக் கடவுள் கொடுக்கிறாரோ இல்லையோ அறிவியல் கொடுக்குது, வெயில் காலத்தில குளு,குளுன்னு இருக்கணுமா? குளிர்காலத்தில கதகதனு இருக்கணுமா? எந்த நேரத்தில என்ன வேணும்? யார்ட்ட பேசணும் அறிவியல் கொடுக்குது”.

 நம்ம செய்யுற வினைகளுக்கு ஏற்ப கடவுள் பலன் கொடுக்கிறாரோ இல்லையோ அறிவியல் கண்டிப்பா பலன் கொடுக்குது”, ஒரு பரிசோதனை செய்தால் அதற்கு ஒரு விளைவு எப்போதும் இருக்கும்”, என்று தன்னுடைய கருத்துக்கு வலிமை சேர்த்தார்.

”என்ன என்னல்லாமோ உங்க  அறிவியல் செய்யுது ஆனால் ஜெயகாந்தனின் ‘இல்லாதது எது என்ற கதையில் சொல்ற மாதிரி எங்கோ இருக்குற கோளுக்கு துல்லியமா விண்கலத்த கொண்டு இறக்குற உங்க அறிவியலால மண்டைல இருக்கிற நரைச்ச முடியைக்கூட  இயற்கையான முறையில கருப்பாக்க முடியல என்று கடவுளைக் கலாய்த்தேன்.

கடவுள் பொறுமையாகச் சொன்னார், “அறிவியல்னால இப்ப இன்னும் அதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்க முடியலன்னு ஒத்துக்கிறேன் ஆனால் எப்போதுமே கண்டுபிடிக்க முடியாதுன்னு உங்களால உறுதியா சொல்லமுடியுமா? எது எல்லாம் ஒரு காலத்தில சாத்தியம் இல்லன்னு நெனச்சாங்களோ அதெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்துல அறிவியலோட சாதனையால சாத்தியமாகுது இல்லையா? இன்னும் சொல்லப்போனால் அறிவியலினால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும் என்றார்.

அறிவியல்தான் கடவுள்னு சொல்றீங்களா? என்றான் சத்யன். “இல்லை அந்த அறிவியலை கையாள்வது எது? மனித மூளைதான? சிங்கம் வலிமையானதுதான் ஆனால் அதை கையாளுகிற ரிங் மாஸ்டர் அதை விட வலிமையானவர் இல்லையா?

யாரோ கடவுள்னு ஒருத்தர், அவருதான் மைய சக்தினு சொன்னால் அவரு மூளை இல்லாத மனிதர்களைப படைத்திருக்கலாம் அல்லவா?.

“மனித மூளை மாதிரி மிகவும் சக்தி வாய்ந்தது, பயங்கரமானது எதுவும் இல்லை. மூளையை உபயோகித்து ஒரு யானையை நிற்க வைத்து அதன் நான்கு கால்களுக்கும் இடையில் ஒரு யானைப்பாகனால் நிம்மதியாக உறங்க முடிகிறது. அவ்வளவு பெரிய மிருகம் மனிதனின் மூளைக்கு கட்டுப்பட்டு இருக்கிறது என்றால் மனிதனின் மூளை எவளவு சக்தி வாய்ந்தது!

“பத்து மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்துக்கு ஒரு மங்கள்யானைத் துல்லியமாக இறக்க முடியும் என்றால் மனித மூளை எவ்வளவு மகத்தானது?”

“இன்னும் சொல்லப்போனால் மனித மூளையினால கடவுள்னு ஒருத்தர் இருக்காருன்னு நிருபிக்கமுடியும், அப்படி ஒருத்தர் இல்லைன்னு நிருபிக்கவும் முடியும்” என்றார் கடவுள் ஆணித்தரமாக. .

“அப்படின்னா படைத்தவனை விட படைப்புதான் பெரிது என்கிறீர்களா?” என்றேன், விடாமல். “இல்லை படைத்தவன்தான் பெரிது” என்று சிறிது நிறுத்திவிட்டு “மனிதன்தான் கடவுளைப் படைத்தான், எனவே படைத்தவன்தான் பெரிது என்றார். தலை சுத்தியது எனக்கு.

“அழகா உங்க வாதங்களை அடுக்குறீங்க, நமக்கு இன்னும் சில விஷயங்கள் எதுக்கு நடக்குதுன்னு தெரியலை, சிலவற்றை கண்மூடித்தனமா பின்பற்றுகிறோம்,

சடங்குகள் சம்பிரதாயங்கள் இதெல்லாம் எதுக்கு?

      இதுல மூட நம்பிக்கைகளும் இருக்கு,

மூளைதான் அபாரமானது என்றால் நம்முடைய உணர்வுகள், முக்கியமா சென்டிமென்ட்சுனு சொல்றாங்களே அதெல்லாம் என்ன? காதல், பாசம், நட்பு போன்ற உணர்வுகளைப் பற்றி உங்க கருத்து என்ன என்று கேள்விகளை அடுக்கினோம். கடவுளை பற்றி இவ்வளவு வேறுபட்ட கோணத்துல கொடுக்கிறாரே அப்படின்னா இவைகளைப் பற்றியும் பிரிச்சு மேஞ்சுருவாறு என்ற நல்ல எண்ணத்துல(!)தான் கேட்டேன். மனுஷன், சாரி கடவுள் அசரவில்லை அவருடைய விளக்கம் அடுத்த பாகத்தில்….

தொடரும் தேடுதல்….

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-3

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

Share This Post