சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-6

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-6

பாகம் 6: (சூன்யத்தைத் தேடி…..)

இரவு மணி 11 ஐத் தாண்டியது, ரயில் ஆந்திரவுக்குள் நுழைந்து வேகம் எடுத்தது. ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றோம். எனக்கு தூக்கம் வரவில்லை. சூன்யத்தை தேடி கிளம்பினோம் ஆனால் இங்கே இன்னும் பல விஷயங்கள் நம்மை சுத்த விடுகிறதே என்று மண்டை குழம்பியது,

ஒரு வழியாக உருட்டும் மிரட்டும் பல கனவுகளுடன் தூங்கிவிட்டேன். காலை ரயிலின் கிரீச் சக்கர இழுப்பு சத்தத்துடன் விழித்தேன், ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டிருந்த அனாமிகா சற்று நிமிர்ந்து “குட்மார்னிங் சார்”, என்றாள். “சீக்கிரம் எந்திச்சிடீங்களா? என்ன புத்தகம்”, என்றேன். “சும்மாவா சொன்னாங்க பெரியவங்க” அப்டின்னு ஒரு டைட்டில் சார், நம்முடைய பழைய பழக்கவழக்கங்கள் எல்லாமே காரணத்தோடதான் பெரியவங்க சொன்னாங்கனு விளக்கமா போட்ருக்காங்க, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு சார்”, என்றாள்.

“என்ன காலையிலயே ஆரம்பிச்சிடீங்களா”, என்றான் சத்யன்.

“நேற்று ஆவிகளைப் பற்றி பேசும்போது மூடபழக்கவழக்கங்களைப் பற்றி கேட்டிங்க அதுல இருந்து ஆரம்பிக்கலாம்” என்றார் கடவுள். “எது சார் மூடநம்பிக்கை, எதுக்காக அதை அப்படி சொல்றோம்?”, என்றான் சத்யன்.

“கண்மூடித்தனமா சிலவற்றை நாம் பின்பற்றுகிறோம்ல அதான் மூடநம்பிக்கை”, என்றாள் அனாமிகா. “ஆனால் மூடநம்பிக்கையை பின்பற்றுகிறவங்க மூடர்கள், மத்தவங்க அறிவாளிங்க  அப்படின்னு ஒரு கருத்து இருக்கே சார்”, என்றேன்.

கடவுள் ஒரு மென்மையான் சிரிப்புடன் ஆரம்பித்தார், “அப்படினா எல்லாருமே இங்க மூடர்கள்தான்” என்றார். “எல்லாருமே சில மூடநம்பிக்கைகள் வச்சுருக்கோம். ஒரு உதாரணம் சொன்னா மறுபடி கடவுள் பக்தியை இழுக்கவேண்டி இருக்கும், இங்க நாம கடவுளுக்கு நேர்த்திகடன் செலுத்துவதற்காக பூக்குழி இறங்குறோம், அதையே பிரான்ஸ்ல வருடத்துகொருமுறை ஜாலியா, வீரதீர சாகசத்துக்காக செய்யிறாங்க. மனுஷன் லாஜிக்கலா யோசிச்சு செய்யிற விஷயங்கள் இரண்டு சதவீதம் கூட கிடையாது”.

.“உங்களால பார்க்க முடிகின்ற,தொட்டு உணர முடிகின்ற விஷயங்களில் நம்பிக்கை கொண்டிருப்பது நம்பிக்கையே இல்லை, உங்களால் பார்க்க முடியாத ஒரு விஷயத்தில் நம்பிக்கை வைப்பதுதான் வெற்றி அதுதான் ஆசிர்வாதம் இதை ஆப்ரஹாம் லிங்கன் சொல்லிருக்கிறார்.

“பெரும்பாலும் சும்மாவா சொன்னாங்க பெரியவங்கனு, அவங்க செஞ்சத என்னனு ஆராய்ந்து பார்க்காமலே கண்மூடித்தனமா பின்பற்றுனா அதுவும் மூடநம்பிக்கைதான்”, என்றார் கடவுள்

“அப்படினா அவங்க தப்பாதான் சொல்லிருக்காங்கனு சொல்றீங்களா?”, என்றார் அனாமிகா. “அப்படி சொல்லல ஆனா எல்லாத்தையும் நம்ம பெரியவங்க சொல்லிடாங்கனு பின்தொடர முடியுமா? உடன்கட்டை, பால்ய விவாகம் பெரியவங்க சொன்னதுதான் ஆனால் அது எவ்வளவு மோசமான விஷயம்? அதெல்லாம் நம்ம தூக்கிபோடலையா?என்றார்.

“தலைவரே நான் கழுத்துல உருத்ராட்ச கொட்டை போட்டுருக்கேன் இதை பல பேரு கிண்டல் பண்றாங்க”, என்று என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சொன்னான் சத்யன்.

“கையில கட்டுற கயிறு, கழுத்துல போடுற கொட்டை இதல்லாம் நமக்கு எதோ ஒன்னு கொடுக்குதுன்னு நம்புறோம் இதல்லாம் மூட நம்பிக்கைனா திருமண நிகழ்ச்சில பல சடங்குகள் பண்றோம் அதெல்லாம் கூட மூட நம்பிக்கைதான். நீங்க கையில கயிறு கட்றீங்க உங்கள கேலி பண்றவங்க ராக்கி கட்றாங்க, பிரண்ட்ஸ் பேண்டு கட்றாங்க, ஏன் தாலி கட்றாங்கல்ல அதும் கயிறுதான?

    கிராமத்துல பச்சை குத்றாங்க, நகரத்தில டாட்ட்டூ,

    மஞ்சத்தண்ணி கிராமம், ஹோலி நகரம்;

       “திருநீறு பூசுறது மண்டையில நீர் கோற்காம தடுக்கும், ஸ்படிக மாலை போடுறது உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் ஏன் வாகனத்தின் முன்னால் கட்டுற மிளகாய் எலுமிச்சைக்கு கூட அறிவியல் காரணம் சொல்லறாங்க, கடவுள் மேல உள்ள பக்தில செய்யிறோமுன்னு யாரும் சொல்றதில்லை. லாஜிகல்லா, அறிவியல் ரீதியா ஏதாவது ஒரு விளக்கம் சொன்னாதான் நம்ம அறிவாளித்தனமா ஒன்றை பின்பற்றுகிறோமுன்னு எல்லாரும் நம்புவாங்க? அப்படித்தான? நீங்க எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருந்தா போதும் நீங்க கோயில்ல போயி உடம்பு முழுவதும் எத வேணா கட்டலாம் எங்க வேணா கீறலாம், மண்(சோறு)பீட்சா கூட சாபிடலாம்”.

“அப்படின்னா எதுவும் மூட நம்பிக்கை இல்லன்னு சொல்றீங்களா?” என்றேன்.

எல்லாமே மூட நம்பிக்கைதான்னும் சொல்லலாம். எதுக்கு காதலர் தினம், அம்மா தினம், அப்பா தினம், பக்கத்து வீட்டுகாரரு தினம்(?!) எல்லாம் கொண்டாடுறோம்? பிறந்த நாளுக்கு புது உடை போடுறோம்? லாஜிக்கலா பார்த்தா பிறந்த நாளுக்கு பிறந்த மேனியாத்தான் கொண்டாடனும். இங்க எல்லாத்துக்கும் அவங்க அவங்க சவுகரியத்துக்காக ஒரு விளக்கம் வச்சுருக்காங்க,

இன்னும் ஒரு சில பேரு இலக்கியங்கள்ள, ஓலைச் சுவடிகள்ள அவங்க இப்ப பண்ணிகிட்ருக்கதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு அதை பின் பற்றிகிட்டே காரணத்தை தேடுறாங்க.

“நம்மள கிண்டல் பண்றவங்கள எப்படி சார் சமாளிக்க?”, என்றான் சத்யன்.

“ரொம்ப சிம்பிள் எனக்குப் பிடிச்சிருக்கு நான் பண்றேன்னு சொல்லுங்க, அப்படி சொல்லிட்டா நீங்க எத வேணா பின்பற்றலாம், யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்கவேண்டியதில்லை.

இன்னும் கொஞ்சம் தெளிவா பேசுறவங்களுக்கு “நமக்குள் ஒரு உலகம் இருக்கு, சிந்தனை, உணர்வு, சக்தி, ஒளி, மற்றும் அழகு ஆகியவை அடங்கிய உலகம், அது நம் கண்களுக்கு புலப்படாவிட்டாலும் அதன் ஆற்றல்கள் வலிமை வாய்ந்தவை” அந்த ஆற்றல் நம்மை அறிவு ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ யோசிக்க விடாது, கண்மூடித்தனமா எதையாவது பின்பற்றும், அது பலிச்சா நம்பிக்கை, பலிக்காட்டி மூட நம்பிக்கை அப்டின்னு சொல்லுங்க.

“நீங்க என்ன சொல்ல வறீங்கன்னா, நாம் எதையும் கண்மூடித்தனமாவோ, கண்ணை திறந்து வைத்துக்கொண்டோ பின்பற்றலாம், முடிவை வைத்துதான் எதுவும் தீர்மானிக்கப்படும், பாதையை வைத்து அல்ல அப்படித்தான?,” என்றேன்.

நீங்க சொல்றது பாதி புரியுது, மீதி புரிஞ்ச மாதிரி இருக்கு என்றாள் அனாமிகா, சத்யன் என்ன சொல்றதுன்னு தெரியாம “ங்கே” என்று விழித்தான்.

நான் சொன்னத நம்புறதும், நம்பாம இருக்குறதுக்கும் உள்ள இடைவெளிதான் நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் உள்ள இடைவெளி என்றார் கடவுள்.

அனைவருக்கும் பசி வயிறை கிள்ளியது, தேடலை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு சில பல இட்லிகளை உள்ளே தள்ள ஆரம்பித்தோம்…

தேடல் தொடரும்…

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-5

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-4

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-3

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

Share This Post