தப்புத் தப்பாய் – 1

தப்புத் தப்பாய் – 1

பாகம் 1: (தப்புத் தப்பாய்…)

 “மீரா….ஆ…ஆ…ஆ….., என்று வீட்டுக்காரம்மா கத்தும் கத்தலில் மாடிப்படி ஏறிக்கொண்டிருந்த நான் அதிர்ச்சியாகாமல் தொடர்ந்தேன். நான் என்பது இங்கே வருகிற பிப்ரவரி  22ல் முப்பது வயதைத் தொடும், பார்ப்பதற்கு கொஞ்சம் சுமாரான, ஐந்தரை அடிக்கு கொஞ்சம் கூடுதல் உயரமான ஹரிக்ரிஷ் என்ற என்னைக் குறிக்கும். இந்த மாடிப் போர்ஷனுக்கு நான் குடி வந்து ஒரு வாரமே ஆகிறது. இந்த ஒரு வார காலத்தில் நான் அடிக்கடி கேட்ட பெயர் “மீரா….ஆ…ஆ…ஆ…..”, அதற்கு அடுத்தபடியாக அடிக்கடி கேட்டது “ஏம்மா இப்படி கத்துற?” என்று நிதானமாக மறுமொழி கூறும் மீராவின் குரல்.

நம்மிடம் யாராவது கோபமாக கத்தும்போது நாம் நிதானமாகப் பேசி கத்துகிறவருடைய டென்ஷனை இன்னும் அதிகப்படுத்தலாம் என்ற யுக்தி தெரிந்த ஆளாக இருக்கலாம் இதுவரை இன்னும் நான் பார்க்காத அந்த மீரா. “தம்பி மொட்டைமாடில என் பொண்ணு இருந்தா வரச் சொல்லுங்களேன்”, என்று என்னுடைய வீட்டின் கதவைத்திறக்கும் முன் வீட்டுக்காரம்மா ஒரு வேண்டுகோளை வைத்தாள். ‘சரிங்க”, என்று பதிலித்து விட்டு மீராவை முதன் முதலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற சுவாரஸ்யம் கொஞ்சமும் இல்லாமல் மேலே செல்லும் படிகளில் தொடர்ந்தேன்.

மாடியின் பால்கனியை பிரிக்கும் மூன்றடி குட்டை சுவரில் படுத்திருந்த மீரா, நான் மேலே வரும் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்தாள். நந்திதா தாஸ் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது. அச்சு அசலாய் 21 வயசில் நந்திதாதாஸ் இவளைப் போலத்தான் இருந்திருப்பாள். பெண்களின் அழகை அவ்வளவாக உன்னிப்பாக பார்த்து ரசிக்கும் பழக்கமில்லாத நான் கண்ணை மட்டும் ஆழமாகப் பார்ப்பேன். அதில் ஒரு உயிர்த்துடிப்பு இருந்தால், அதுதான் அழகு எனக்கு. பார்த்தேன், மீராவிடம் 200% இருந்தது. “ஹரிக்ரிஷ்?! என்று என்னைப் பார்த்தவுடன் என்னுடைய பல்சை அதிகப்படுத்தினாள் நந்திதா தாஸ், மன்னிக்கவும் மீரா.. இந்தப் பெண் என்னுடைய வாழ்வின் சில முக்கிய பக்கங்களில் அச்சேறப் போகிறாள் என்று என்னுடைய பக்க்ஷி சொன்னதை உணர்ந்து கொண்டே  ஆம் என்று லேசாக தலையாட்டினேன்.

“என்ன பேரை சொன்னவுடன் இப்படி அசந்துட்டீங்க?, இன்னும் சொல்லவா?”, என்று தொடர்ந்தாள்.

“வயசு 30 இருக்கும், அடிமை வேலை, மன்னிக்கவும் தனியார் கம்பெனில வேலை, வெளில சொல்ற மாதிரி சம்பளம், அதாவது முப்பதாயிரம்?, இன்னும் குட்டைல விழாதவர் ஐ மீன் திருமணம் ஆகாதவர், பிரசன்னா கிடார், கதரி கோபால்நாத் சாக்ஸபோன் ரசிக்கும் வழக்கமுள்ள ஒரு அசாதாரண ஆள் நான் என்று உங்களை உங்களுக்கே காட்டிக்கொள்கிற ஒரு ஆள். சாதாரண இந்த ஜன ஜந்துக்களை புண்படுத்தாமல் எல்லோருக்கும் எந்த விமர்சனத்துக்கும் ஒரு புன்சிரிப்பை மட்டும் காட்டிக்கொள்(ல்)கிற  என்னுடைய பார்வையில் சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான ஆள்?!” என்றாள்.

கையெடுத்து கும்பிட்டேன், “போதும், போதும். அதிகமான ஷாக் முதல் அறிமுகத்துலயே தாங்கமுடியல”, என்றேன். அழகாய் சிரித்தாள். “எப்படி இப்படி? இதே வேலையாய் இருந்தியா?”, என்றேன்.

“எனக்கு நெறையா உருப்படாத வேலைகள் இருக்கு,” என்று ஆரம்பித்த மீரா, “புத்தகம் படிக்கிறது, கவிதை எழுதுவது, மொட்டமாடில படுத்து இந்த வானத்த அளக்குறது, வெங்காயம், வெங்கா…..யாம் என்று தெருல இருந்து வருகிற குரலை அதே மாதிரி மிமிக்ரி பண்ணி பார்ப்பது இப்படி நெறையா சொல்லலாம். நீங்க குடி வரப்ப வேலை, சம்பளம், திருமண விஷயங்கள் எல்லாம் அம்மா, அப்பாட்ட சொன்னது, காதுல விழுந்தது, மத்ததெல்லாம் என்னுடைய கலெக்சன்”, என்றாள். “எதுக்கு இந்த சேகரிப்பு, அப்படித்தான நினைக்குறீங்க?”, என்று கேட்டுவிட்டு என்னுடைய பதிலுக்குக் காத்திருக்காமல் தொடர்ந்தாள், “யாரு வாடகைக்கு வந்தாலும், முதல் நாள் அல்லது மறுநாள் எங்கம்மா ‘மீரா மீரா’ னு போடுற ஏலத்துல கண்டிப்பாக அது யாருனு பார்ப்பாங்க. ஆனால் நீங்க அவளைப் பத்தி ஐ மீன் என்னைய பத்தி அட்லீஸ்ட் பார்க்கக் கூட சுவாரசியம் இல்லாம் ரோபோ மாதிரி போயிட்டு இருந்தீங்க. அதுதான் என்னைய உங்க பக்கம் திரும்ப வச்சது. நீங்க யாருன்னு கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன், நீங்க என்னைய பார்க்கல ஆனால் நான் உங்களை இரண்டு தடவை பார்த்தேன்”, என்றாள்.

நம்மைப் பற்றி நாம் சொல்லாமலே யாராவது சொன்னால் மனதுக்குள் சில மத்தாப்புகள் பிரகாசிக்கத்தான் செய்கின்றன. அதுவும் ஒரு இளம் பெண் சொன்னால்?  “ரொம்ப சந்தோசம், உன்னோட அம்மா கூப்புடுறாங்க போ, அப்புறம் நேரம் கிடைக்கும் போது பேசலாம்”, என்றேன். வினோதமான ஒரு சிரிப்புடன் நகர்ந்தாள். அவள் படுத்திருந்த இடத்தில் ஒரு திறந்த நோட்டும் ஒரு பேனாவும் இருந்தது. நிறைய எழுதுவாள் போலிருக்கிறது. திறந்த பக்கத்தில் ஒரு கவிதை இருந்தது. அனுமதி இல்லாமல் படிக்கலாமா கூடாத என்று நான் யோசிக்கும் முன்னரே என் கண்கள் வாசிக்க ஆரம்பித்தது,

           வரையப்பட்ட ஓவியம் – மீறாது

           வரைந்த ஓவியனை

           செதுக்கப்பட்ட சிற்பம் – மீறாது

           செதுக்கிய சிற்பியை

           படைத்தவன் பெருசா

           படைப்பு பெருசா போட்டியில்

           மீறப் பார்க்கின்றன

           பெற்றோர்களை

           இன்றைய இளம்வயதினர்!

யோசித்துக் கொண்டே என்னுடைய வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். மீராவின் நோட்டில் இன்னும் என்ன எழுதி இருக்கிறாள் என்று பார்க்க ஆசைப்பட்டாலும் எனக்கு எதிரே உள்ள மேஜையில் அந்நோட்டையும் பேனாவையும் வைத்து விட்டு சோபாவில் சவுகரியமாக அமர்ந்தேன்.

திறந்து இருந்த கதவை இரண்டு தட்டு தட்டிவிட்டு “உள்ளே வரலாமா?”, என்ற கேள்வியுடன், என்னெதிரே வந்து “உட்காரலாமா?”, என்று கேட்டுகொண்டே உட்க்கார்ந்துவிட்டாள், மீரா.

என்ன பெண் இவள், எப்படி உடனே சில பெண்களால் இவ்வளவு உரிமை எடுத்துக் கொள்ள முடிகிறது? ஆண்கள் சுத்த வேஸ்ட் ஒரு அட்ரெஸ் கேட்கக் கூட எவ்வளவு தயங்குகிறோம்?! என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, “ ஒரு கவிதை மட்டும்தான் படிச்சிருபீங்கனு நினைக்கிறேன்”, என்று என் கண்ணைப் பார்த்து நேரில் கேட்டாள்.

“அனுமதி இல்லாமல் அதற்கு மேல்  படிக்கலை”, என்றேன். “நோ பிராப்ளம்”, என்றாள். “அனுமதி வாங்கிட்டு பண்ற அளவுக்கு அது ஒன்னும் பெரிய சுயவிஷயம் இல்லை” என்றாள்.

“கவிதை நல்லா இருந்தது, உன்னை மையமா வச்சு எழுதினாயா? சமூகப் பொறுப்பா? இளம் வயதினருக்கு ஒரு எச்சரிக்கையா?, என்றேன்.

“ஒரு தடவை படிச்சதுக்குள்ள ஒரு விமர்சனமா” என்றவள், இப்படித்தான் இங்க எல்லாமே தப்புத் தப்பாய் நடக்கிறது”, என்றாள்.

“கவிதை என்பது விமர்சனம் பண்றதோ, ஒப்பிடுவதோ, ஆராய்ச்சி பண்ணுவதோ இல்லை. வைரமுத்து பெருசா கண்ணதாசன் பெருசா என்று ஒரு கூட்டம் அலைகிறது, ரோஜா அழகா, மல்லிகை அழகா என்று ஒரு கூட்டம் பட்டி மன்றம் நடத்துகிறது. ஏ. ஆரா? இளையராஜாவா என்று ஒரு பக்கம் சட்டைய கிழிச்சிட்டு இருக்காங்க. ரசிப்புத் தன்மை இருக்கிறவங்கனு இதுல யாரையும் சொல்லமுடியாது. ஒரு நல்ல ரசிகன் யாரையும் ஒப்பிடமாட்டான். ஒரு ரசிகனால எந்த ஒரு இரண்டு இசையையும் ரசிக்க முடியும். ஒரே கவிதையை வேற வேற நேரத்தில வேற வேற சூழ்நிலையில வாசிச்சா உங்களுக்கு வேற வேற அர்த்தம் விளங்கும். ஒரு கவிஞன் எந்த அர்த்தத்துல இதை எழுதியிருக்கிறானு யூகிக்கிறது ரொம்ப கஷ்டம். கவிதையை காப்பி குடிக்கிற மாதிரி மடக்குனு படிக்கிறாங்க. நிறுத்தி நிதானமா படிக்கனும். மறுபடி மறுபடி படிக்கனும். மனசுக்குள்ள படிக்கனும், வாய் விட்டு படிக்கனும். அப்பதான் அதோட அர்த்தம் விளங்கும்னு சொல்ல மாட்டேன், ஆனால் அதை ரசிக்க முடியம்”, என்றாள்.

“மீரா நீ இலக்கியம் படிக்கிறயா?”, என்றேன்.

“பள்ளிப் படிப்புனா பன்னிரெண்டுதான் முடிச்சிருக்கேன், வாழ்க்கைப் படிப்புன்னா ஒன்பதாவது படிக்கறப்போ ஆரம்பிச்சது இன்னும் போயிட்டு இருக்கு”, என்றாள்.

“அதென்ன ஒன்பதாம் வகுப்புல எப்படி ஆரம்பிச்சது?”, என்று அவளை ஒரு சிறுமியாக நினைத்துக் கேட்டேன்.

“அது ஒரு பெரிய விஷயமில்லை”, என்று ஆரம்பித்தவள், “தப்புத் தப்பாய் நினைத்ததன் விளைவு, என்று சொல்ல ஆரம்பித்தாள்.

                                                      இன்னும் வரும்….

Share This Post