தப்புத் தப்பாய் – 2

தப்புத் தப்பாய் – 2

பாகம் 2: (தப்புத் தப்பாய்…)

    “ஒன்பதாம் வகுப்பில் நடந்த ஒரு விஷயம்னு சொன்னவுடன் நீங்கள் என்ன நினைத்தீர்கள்? ஏதாவது காதல் சமாச்சாரமா இருக்கும்னுதான? இப்படிதான் எதையாவது தப்புத் தப்பாய் நினைக்கிறது, என்றாள். அடச்சே இனிமேல் எதையும் யூகிக்கக் கூடாது போல என்று நினைத்துவிட்டு, அப்படி எல்லாம் இல்லை, நீயே சொல்லு”, என்று எல்லாரும் சொல்கிற பொய்யை சொன்னேன்.

மீரா தொடர்ந்தாள், ”ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என்னுடைய ஆசிரியர் வகுப்பில் ஒரு கேள்வியை கேட்டார், ‘இந்த வகுப்பில் சுதந்திரமான(ண)வர்கள் யாராவது இருக்குறீங்களானு?’ எப்பவும்போல எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கொண்டோம். எப்போதாவது ஆசிரியர் இந்த மாதிரி கேட்கும், கொஞ்சம் யோசிக்கவைக்கும் கேள்விகளுக்கு, பெரும்பாலும் மாணவர்களின் ஒரு பொதுவான பதில், அடுத்த மாணவரின் முகத்தைப் பார்ப்பதுதான். இது என்ன ரியாக்சனோ தெரியல, உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் இந்த ரியாக்சனில் எப்படி ஒரே மாதிரி இருக்குறாங்கன்னு புரியல. நான்தான் அரைகுறையாய் கையை தூக்கினேன்.

‘வெரி குட்’, ‘மீரா மட்டும்தான் இந்த வகுப்பில் சுதந்திரமானவளா?’, என்ற ஆசிரியர், என்னிடம் ‘நீ எப்படி சுதந்திரமானவள் என்று சொல்கிறாய் என்றார். நான் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன் ‘அதான் 1948 ல நமக்கு சுதந்திரம் கெடச்சாச்சுல’, என்று கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குரல் வந்தது, ஆசிரியர் உட்பட அனைவரும் சிரித்து முடித்தவுடன் ‘சொல்லு மீரா’ என்றார். ஒரு ஆசிரியரை எப்படி திசை திருப்பினாலும் கடைசில அவங்க கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கும் வரை விடமாட்டங்க போல.

‘என்னுடைய முடிவுகளை நானே எடுத்துக் கொள்கிறேன் எனவே நான் சுதந்திரமானவள்தான, என்றேன்.

‘தப்பா எடுத்துக்கக் கூடாது நீ எந்த மதத்தை சேர்ந்தவள்?’, என்றார். ‘இந்து மதம்’ என்றேன்.

‘அப்படி என்றால் நீ ஒரு எல்லைக்குள் அடைபட்டிருக்காய், அதற்குள் நிறைய சட்ட திட்டங்கள் இருக்கிறது, ஒரு இந்து எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற விதிகளுக்கு கீழ்படிந்துதான் நீ நடந்துகொள்ளவேண்டும் அப்படித்தானே’, என்றார். ‘ஆமாம்’, என்றேன்.

‘பின்பு எப்படி நீ சுதந்திரமானவள் என்கிறாய்?’, என்றார். ‘எந்த ஒரு மதத்தையும் பின்பற்றுபவர்கள் யாருமே சுதந்திரமானவர்கள் இல்லை, நீ எந்த மதத்திலும் பிறந்து இருக்கலாம், வளர்ந்தவுடன் ஒரு மதத்தைத் தேர்ந்து எடுப்பதில் உனக்கு சுதந்திரம் உண்டு, ஆனால் அந்த மதத்திற்குள் சென்ற பிறகு உன்னுடைய சுதந்திரத்தை நீ இழக்கிறாய், அந்த மத விதிகளை மீறி உன்னால் நடக்கமுடியாது, அங்கே உன் சொந்த கருத்துகளுக்கோ, உன்னுடைய சொந்த முடிவுகளுக்கோ இடமில்லை, பின்பு எப்படி நீ சுத்தந்திரமானவள்?, என்றார்.

‘அப்படி என்றால் உங்களுடைய கேள்விக்கு என்ன பதில்?’, என்ற என்னுடைய கேள்விக்கு ஆசிரியர் கூறினார், ‘நான் சில விசயங்களில் சுதந்திரமானவள் என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும்’ என்றார். என்னை முதன் முதலாய் யோசிக்க வைத்தது ஆசிரியரின் விளக்கம். நான் என்னைப் பற்றித் தப்பாய் நினைத்து இருந்ததற்கு எனக்கு கிடைத்த முதல் மரண அடி அது”, என்றாள் மீரா.

மீரா பேசும்போது அவளுடைய கண்களையும், உதடுகளையும் கவனித்தேன், மிக உயிரோட்டமாக இருந்தது. மிகத் தெளிவாக விவரித்தாள். ஒரு விஷயத்தில் நீங்கள் எவ்வளவு தெளிவாக இருக்குறீர்கள் என்பதை நீங்கள் பேசும்போது உங்கள் கண்களும், உங்களின் உதடுகளும் காட்டிக் கொடுத்துவிடும். கொஞ்சம் கூடுதலாக அவளது உதடுகளை கவனித்துவிட்டேன் என்பதை அவளும் கவனித்துவிட்டாள். ‘ஹலோ’ என்று கண் முன்னே சொடுக்கினாள். கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது, நிதானத்துக்கு வந்தேன்.

“உங்க அம்மா இன்னும் மீரா……ஆஆஆஆஆ….னு கூவலையேன்னு யோசிச்சேன்”, என்று சமாளித்தேன்.

“கண்டிப்பா கூவமாட்டாங்க, என்னோட கணிப்பு சரியா இருந்தா ரெண்டு ரவா லட்டும், கொஞ்சம் காராச்சேவும் எடுத்துட்டு வருவாங்க உங்களுக்கு கொடுக்க”, என்றாள்.

“அதெப்படி சொல்ற?”, என்று தொடரும் முன், “தம்பி உள்ள வரலாமா?”, என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாங்க மீராவின் அம்மா!

பேய் படத்தில் படம் ஆரம்பித்து ஒன்பதாம் நிமிஷம் தான் பேயை பற்றியோ, அல்லது பேயோ முதல் என்ட்ரி ஆகும்னு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்போது, படம் ஆரம்பித்த ரெண்டாவது நிமிஷமே பேய் என்ட்ரி ஆனால் எப்படி இருக்கும் அது மாதிரி இருந்தது எனக்கு. மீரா சொல்லி ஒரு அரை மணி நேரம் கழித்து அவங்க அம்மா வந்திருந்தா கூட இவ்வளவு சர்ப்ரைஸ் இருந்திருக்காது. என்னுடைய கண்கள் அவங்கம்மா கையில் வைத்திருந்த தட்டிற்கு சென்றது, சரியாக ரெண்டு ரவா லட்டு, கொஞ்சம் காராச்சேவு! நோ ச்சான்ஸ்!!

அசையாமல், என்னுடைய விழிகளை மட்டும் மீராவின் பக்கம் திருப்பினேன், என்னுடைய கண்களைப் பார்த்து இரண்டு புருவங்களையும் சடக், சடக் என்று இரண்டுமுறை தூக்கி இறக்கினாள், “எப்படி நான் சொன்னேன்ல?”, என்று கேட்பது போல் இருந்தது.

“தொந்தரவு பண்ணிட்டேனா?, சாப்ட்டுகிட்டே பேசுங்க, வீட்ல செஞ்சதுதான்”, என்று சொல்லி என் கையில் கொடுத்துவிட்டு, “வேலை இருக்கு நான் வாரேன்”, என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்துவிட்டங்க.

“உண்மையச் சொல்லு, உங்கம்மாட்ட அரைமணி நேரம் கழிச்சு மேல கொண்டுவாங்கனு சொல்லிட்டுதான நீ வந்த?”, என்றேன்.

ஜில்லென்று சிரித்தாள். “நிச்சயமா இல்லை, சில சமயம் தப்புத் தப்பாய் யோசிக்காமல் சரியாகவும் யோசிப்பேன், என்றாள்.

“நான் நம்ப மாட்டேன்”, என்று சொன்னதற்கு, “இது ஒரு பெரிய விஷயம் இல்லை, வீட்ல ரவா லட்டும், காரச்சேவும் செஞ்சிருந்தாங்க, அதான் கொண்டுவந்தாங்க”, என்றாள். “அதெப்படி சரியாக ரெண்டு?”, என்று கேட்டதுக்கு “அம்மா எதுலயும் அளவா இருப்பாங்க, காலம் முழுவதும் பாக்குறேன்ல”, என்றாள்.

“சரி எதுக்கு அவங்க கொண்டுவந்தாங்க, உன்ட்டயே கொடுத்து விட்டுருக்கலாம்ல? என்றேன். “குட் இதுதான் சரியான கேள்வி”, என்றவள், அதற்கு சில பல காரணங்கள் இருக்கலாம்”, என்றவள், தொடர்ந்தாள், “என்னுடைய யூகம் சரியாக இருந்தால், இங்கிருந்து நானாக கீழே போகும் வரையில், மீராஆஆஆ…….னு எங்கம்மா கூவமாட்டங்கன்னு”, அடுத்த யூகத்தைத் தூக்கிப் போட்டாள்.

ஏன் அப்படி சொல்கிறாள் என்று, நான் எதையும் யோசிப்பதா வேண்டாமா என்று தெரியாமல், முப்பது டிகிரி கோணத்தில் தலையை இடதுபுறம் சாய்த்து, அவளையே பார்த்தேன்.

மீரா என்று மனதுக்குள் ஒரு முறை உச்சரித்தேன், என்னுடைய உடம்பில் இதுவரை நான் உணராத ஒரு வேதியல், உயிரியல் மாற்றம் மெதுவாக நிகழுவதை முதல் முதலாய் உணர்ந்தேன்.

தப்புத் தப்பாய் தொடரும்….

Share This Post