தப்புத் தப்பாய் – 3

தப்புத் தப்பாய் – 3

பாகம் 3: (தப்புத் தப்பாய்…)

அவள் கீழே போகும்வரையில், மீரா……ஆஆஆ என்று அவள் அம்மா கூப்பிடவே இல்லை,. ஏன் அப்படிச் சொன்னாள்? நிறைய ஆச்சரியப்பட வைக்கிறாள். அவள் சென்றதும் அந்த அறையில் ஒரு வெறுமை படர்ந்ததை உணரமுடிந்தது.

என்னாச்சு எனக்கு? மேஜை மேல் ஏதோ ஒரு பொருளை பார்த்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தேன். பிறகுதான் நான் நீண்ட நேரம் பார்த்த பொருளைப் பார்த்தேன்(!), அது அவள் மீண்டும் விட்டுச் சென்ற கவிதை நோட்டு. தோராயமாக ஒரு பக்கத்தைத் திறந்தேன்.

“வேலையை ராஜினாமா செய்தபின்

உணராத வெறுமையைக் கூட

ஒரு பெண் ஓரிரு நிமிடங்கள்

பேசிவிட்டு சென்றுவிட்டால்

ஒரு ஆண் உணருகிறான்!”

எனக்காக எழுதப்பட்டது போல இருந்தது. நோட்டை மூடி வைத்துவிட்டேன், எழுந்து அடுத்தவேளை சாப்பாடு தயார் செய்ய ஆரம்பித்தேன். இடையிடையே அவள் நினைப்பு வந்தாலும், மதிய உணவு முடிந்து ஒரு குட்டித் தூக்கம் போட முடிந்தது.

     இஞ்சி தட்டிப்போட்டு, ஒரு ஏலக்காய கொதிக்கிற டீயில் போட்டு சுடச்சுட நல்லா ஸ்ட்ராங்கா ஒரு கப் தேநீர் குடித்தேன். இப்ப மீரா வந்தால் நல்லாருக்கும், கொஞ்சம் கடலை போட்டால் அடுத்து டின்னருக்கு சப்பாத்தி போடலாம், சக்தி கிடைக்கும்னு யோசிக்கிறப்பவே,

“என்ன ஏலக்காய் டீ மணக்குது, எனக்கும் சேர்த்து டீ போட்ருக்கலாம்ல”, என்று கேட்டவாறே மீரா வந்து எனக்கு எதிரில் அமர்ந்தாள்.

“ நீ டீ குடிப்பியா? போட்டுத்தரவா?”.

“ஏன் ஆணுக்குத்தான் டீ பிடிக்குமா? அது ஏன் எல்லா டீக்கடையும் ஆண்களை நம்பித்தான் வச்சுருக்காங்க? எல்லாமே இங்க தப்பாதான் நடக்குது, இன்னும் சொல்லப் போனால் ஒரு ஆணுக்கு டீ எப்படி குடிக்கிறதுன்னு கூட தெரியாது,

“தேநீரை ரசித்துக் குடிப்பதெப்படி

என்று தெரியாத ஆண்களை நம்பி

நாடுமுழுவதும் தேநீர் கடைகள்!”

என்று ஒரு கவிதையே எழுதலாம்”, பொரிந்து தள்ளினாள். அவள் சாதாரணமாகக் கேட்டது எனக்குத்தான் அப்படித் தோன்றியதோ என்று தெரியவில்லை.

“டீ தயாரிக்கிறது எப்படின்னு வழிமுறை இருக்குறாப்புல டீ குடிக்கிறது எப்படின்னு ஏதாவது வழிமுறை இருக்கா?” கடலையை ஆரம்பித்தேன்.

“ஜென் மதத்துல டீ மெடிட்டேசன் பற்றி கேள்விப்பட்டதில்லையா?, ஒரு டீ கப்பை ரெண்டு கையாலதான் எடுப்பாங்க, ரெண்டு உள்ளங்கைய கிண்ணம் மாதிரி சேர்த்து தண்ணீர் அள்ற மாதிரி. எடுத்து வாயருகே கொண்டுபோய் முதலில் அதோட நறுமணத்தைத்தான் அனுபவிப்பாங்க, முதல் சுவையில் அதோட சூடு தெரியும், இரண்டாவது சுவையில் அதோட இனிப்பும் தேயிலையோட துவர்ப்பு கலந்த சுவையும் தெரியும், மூன்றாவது மடக்கிலிருந்துதான் தேநீரை அனுபவித்து குடிக்கணும். கடைசி சொட்டுவரை அனுபவிச்சு குடிக்கணும்”, என்றவள் தொடர்ந்தாள்,

“ஆனால் ஆண்கள் டீ குடிக்கிறப்போ எப்படி குடிக்கீறீங்கன்னு சொல்லவா? தனியா குடிச்சா முதல் மடக்கிலேயே சூடும், இனிப்பும் தெரிஞ்சுக்கிறீங்க, இரண்டாவது மடக்கில், இமாலய யோசனையில் தொலைந்து போகும் நீங்க, கப்பு காலியானாதான் சுய நினைவுக்கே வருவீங்க”,

“இதுவே ரெண்டு மூணு பேரு சேர்ந்து குடிச்சா, எப்ப முதல் மடக்கு உள்ள போச்சு, எப்ப கப்பு காலியாச்சுன்னு கூடத் தெரியாமல், ஒரு பிரதம மந்திரி, ஒரு மந்திரி சபையே, என்ன முடிவு எடுக்கலாமுன்னு முடிய பிச்சுக்கிட்டு இருக்கும் விஷயத்துல அஞ்சு நிமிசத்துல அலசி ஆராஞ்சு ஒரு முடிவுக்கு வந்துருவீங்க”, என்றாள்.

“நியாமான கருத்துதான் நீ சொல்றது இப்ப உனக்கு ஒரு டீ போட்டுத் தாறேன் நீ எப்படி குடிக்கிறனு பாப்போம்”, என்றேன்.

“நான் டீ குடிக்கிறப்போ உங்களுக்கு எதுவும் தப்பாய் தெரியாது, ஆனால்…“ என்று இழுத்தாள். “மீரா…….ஆஆஆஆ என்று கீழிருந்து அதே குரல்.

“நான் இங்க இருப்பேன்னு எங்க அம்மாவுக்குத் தெரியாது, தெரிஞ்சால் இப்படி கூப்புட மாட்டாங்க , கொஞ்சம் பொறுங்க என்னன்னு கேட்டு வாறேன்”,

“டீ போட்டு வைக்கவா?”

“போட்டு வைங்க” என்று படிகளில் இறங்கும்போது தட தடத்து விட்டு பறந்தாள்.

ரெண்டே நிமிடத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்து எதிரில் அமர்ந்தாள்.

ஆரம்பிதேன், “என்னிடம் மூன்று கேள்விகள் இருக்கு, டீய குடிக்குறதுக்கு முன்னாடி என்னோட மூணாவது கேள்விக்கு பதில் சொல்லு”

“கேளுங்க” என்றவாறே கப்பை கையில் எடுத்தாள். இப்போது மூச்சு சீராக வாங்கினாள், எங்க பார்த்து தெரிந்துகொண்டேன்னு கேட்கக்கூடாது.

“நான் டீ குடிக்கிறப்போ உங்களுக்கு எதுவும் தப்பாய் தெரியாது, ஆனால்… என்று இழுத்தியே அது என்ன ஆனால்….?”

“அதுவா நான் டீ குடிக்கிறதை பாருங்க ஆனால் நான் டீ குடிச்சதும் நீங்க என்னோட முகத்தைப் பார்க்கக் கூடாது, நான் சொன்னதுக்கு அப்புறம்தான் பார்க்கணும் சரியா?”.

ரொம்ப குழம்பிட்டேன், யோசிக்கவே முடியல எதுக்காக இப்படி ஒரு நிபந்தனை? என்ன சொல்ல?

“சரி பார்க்கமாட்டேன்”.

அவள் சொன்னது போலவே என்னுடைய டீயை வாயருகில் கொண்டு சென்று நன்றாக மூச்சை இழுத்து மணத்தை ரசித்தாள், நான் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்னு நினைப்பு கொஞ்சமும் இல்லாமல், அவள் மட்டும் அந்த அறையில் இருப்பதைப் போன்று அவ்வளவு ரசித்து டீயை குடித்தாள். இந்த மாதிரி ஒருத்தர் நம்ம போடுற டீயை இவ்வளவு ரசனையோடு குடிச்சால் ஆயுள் முழுக்க நம்ம அவங்களுக்கு டீ போட்டு கொடுக்கலாம் தப்பே இல்லை, ஆனால் அவள் அவளுடைய வாயை விட்டு கப்பைக் கொஞ்சமும் கீழே இறக்கவில்லை.

எனக்கு பல்ஸ் எகிறியது ஏன் குடிச்சவுடன் முகத்தைப் பார்க்கக் கூடாது? லாஜிக்கலா ஒரு முடிவுக்கும் வர முடியல.

குடிச்சு முடிச்சுட்டாள், ஆனால் கப்பை கீழே இறக்காமலேயே கண்ணால் என்னை கண்ணை மூட சொல்லி சமிங்ஞை செய்தாள்.

கண்ணை மூடினேன், என் மேல் உள்ள நம்பிக்கையில் என்னைப் பார்க்காமல் கப்பை வாயை விட்டு கீழிறக்கினாள், ஓரக்கண்ணால் பார்த்தேன், அடடா கவிதை! கவிதை!!

மேலுதடு கீழுதடு சுற்றி அடையாளமாய் என்னுடைய டீ இன்னும் ஈரமாய் ஒட்டியிருந்து, ஒரு கோலம் வரைந்து இருந்தது. இத நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. தெரிஞ்சிருந்தா ஒரு கப் பால் கொடுத்திருப்பேனே?! (எதுக்குன்னு கேட்கக் கூடாது)

துப்பட்டாவை எடுத்து அவசரமாக வாயை துடைத்து முடிக்கும்போது என்னைப் பார்த்தாள், நான் பார்ப்பதை தெரிந்துகொண்டாள். டீ தான குடித்தாள், பிறகு எப்படி அவள் கன்னங்கள் ரோஸ் மில்க்காகியது?!

“பாத்துடீங்கல்ல?”

“கொஞ்சம் பார்த்தேன்”, என்று கொஞ்சம் உண்மை சொன்னேன்.

“எனக்கு சின்ன வயசில இருந்தே அப்படித்தான் குடிச்சு பழக்கம், எங்க அம்மா கூட திட்டுவாங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்கன்னு, எதுவும் நினைக்கட்டும் நான் அப்படித்தான் குடிப்பேன்னு அடம் பண்ணுவேன்”

“நீங்க பார்த்தவுடன் என்ன நெனச்சீங்க?”

“பொய் சொல்லனும்னா இப்ப சொல்றேன் உண்மைய சொல்லனும்னா ஒரு வாரம் கழிச்சு சொல்றேன்”.

“இப்ப பொய் சொல்லுங்க ஆனால் ஒரு வாரம் கழிச்சு உண்மைய சொல்லுங்க”.

“பார்த்த உடன் சிரிப்பு வந்துச்சு, அழகா இருந்துச்சு”

“உங்க பொய்யே உண்மை மாதிரிதான் இருக்கு அப்ப உண்மை?, ஓகே நெக்ஸ்ட் வீக் சொல்லுங்க”.

“சரி உங்க அடுத்த (முதல்) ரெண்டு கேள்வி?”

“முதல் கேள்வி, எதுக்காக கவிதை நோட்டை மறுபடியும் வச்சுட்டுப் போன?”

“ஈகோ(ego), ‘ஈது(iedhu)’  கட்டுப் படுத்தல அதான்”,

“புரியலையா? என்று அவளே கேட்டுவிட்டு “சிக்மண்ட் பிராய்டு தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்.

தப்புத் தப்பாய் தொடரும்….

 

தப்புத் தப்பாய் – 2

தப்புத் தப்பாய் – 1

தப்புத் தப்பாய்

Share This Post