தப்புத் தப்பாய் – 5

தப்புத் தப்பாய் – 5

பாகம் 5: (தப்புத் தப்பாய்…)

   யாரு? நீ புதுசா குடி வந்துருக்க வீட்டின் ஓனர் பொண்ணா?”, என்றவள் கொஞ்சம் பொறாமை கலந்து ஆரம்பித்தாள். “பிளஸ் டூவுக்கு என்ன மெச்சூரிட்டி இருக்கப் போகுது?,

எல்லாரையும் மாதிரி காலேஜூக்குப் போகலையேன்னு ஒரு ஆதங்கம் இருக்கும்,

கல்லூரிப் பொண்ணுங்க மாதிரி ஜீன்ஸ், டீ சர்ட் க்கு மனசு ஏங்குனாலும், அதை விமர்சனம் பண்ணிட்டு சுடிதார் போடுவாங்க.

எனக்கும் ஒரு ஆன்ராய்டு இருக்கு, அதுல மேசேஜ் பண்ண ஒரு ஆளும் இருக்குன்னு காட்டிக்குவாங்க.

ரமணி சந்திரன், பாலகுமாரன ரசிச்சு படிச்சுட்டு, எனக்கு புத்தகம் படிக்கிறதுனா உயிருன்னு சொல்லுவாங்க.

சமையல்லயாவது  தன்னை வெளிக்காட்டிகலாம்னு எதையாவது பார்த்து பீட்ரூட் அல்வா, அவன் இல்லாம இட்லி கொப்பரைல கேக் வைக்கிறது எப்புடின்னு இம்சை படுத்துவாங்க”

நான் அவளது பேச்சை இடைமறித்து, “அப்படி எல்லாம் இல்லை, இந்தப் பொண்ணு கவிதை எழுதுது, சிக்மன்ட் பிராய்டு பேசுது, என்னையப் பத்தி நெறைய விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கு”

“அப்படியா? என்னைய விடவா, அவளுக்கு உன்னைப் பற்றி தெரியும்?”, என்று முகத்தில் ஒரு சிறு கவலையைக் காட்டினாள்.

“என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் சொல்லு’, என்று சின்னப் பூசணியைக் கிளறினேன்.

“போடா தயிர் சாதம்”, என்று சொல்லிவிட்டு இருக்கையை நகர்த்தி அவளுடைய இடத்துக்குச் சென்றுவிட்டாள். ஆனால் அவள் அப்படி சொல்லும்போது அதில் ஒரு இனம் புரியாத ஏக்கம் இருந்தது.

வாழ்க்கை இப்படித்தாங்க, ட்ரைன்ல முறுக்கு வித்துட்டு ஒவ்வொரு கம்பார்ட்மென்டா போய்கிட்டு இருப்பவன் போல, அது பாட்டுக்கு போய்கிட்டு இருக்கும். ஆனால் திடீர்னு ஆண்டவன் நமக்கு வைப்பான் பாருங்க ஒரு முறுக்கல் அதாங்க டர்னிங்,

அப்படி முறுக்கு வித்துட்டு நம்ம பாட்டுக்கு போயிட்டு இருக்கும்போது, ஒரு நாளு, யாரோ ஒரு பொண்ணு அல்லது ஒரு பொம்பளை, முறுக்கு வாங்கிட்டு, காசு கொடுத்துட்டு ஒரு பத்து செகண்ட் நம்மள ஒரு பார்வை பார்க்கும் பாருங்க! அது எதுக்குப் பார்க்குது? நம்மளை இதுக்கு முன்னாடி கவனிச்சிருக்கா? இப்பத்தான் பார்க்குதா? பார்த்தவுடன் நம்மளை பிடிச்சுருச்சா? அப்புடின்னு நிமிசத்துல நமக்கு நூறு யோசனை வரும், அங்க இருந்து சட்டுன்னு போகவும் முடியாம, அங்கயே நிக்கவும் முடியாம ஒரு அவஸ்த்தை இருக்கே அதான் இப்ப என்னோட நிலைமை.

வீட்டுல மீரா, இங்க சின்னப் பூசணி இதுகள்லாம் என்னோட வாழ்க்கைல யாரு?, நம்ம கூட வரவங்களா?, எதுக்கு?, எவ்வளவு காலத்துக்கு?, இந்த மாதிரி கேரக்ட்டருக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கலாம்?,

நிதானமா யோசிச்சு அவங்களுக்கான ஒரு இடத்தை நிர்ணயம் செய்யுற அளவுக்கு நம்ம தெளிவான ஆட்களா? மனுஷன் அவ்வளவு அறிவு ரீதியான படைப்பா? உணர்வுரீதியான படைப்புதான? கொஞ்சம் சவுரியமான இடம் கிடைத்ததும் மனசு அதுல சரிஞ்சிக்கதான பார்க்குது. இவங்க அன்புக்கு ஏங்குறவங்களா? கஷ்டப்படுறவங்கட்டதான் அன்பா இருக்கணுமா? எல்லாத்துலயும் என்ன பலன்னு பார்க்காம அன்பு செலுத்தலாமே?

இல்லை, அது பிரச்சனை இல்லை அன்பு செலுத்துறதோட நாம் நிப்பாட்டிற மாட்டோம், அதுக்கு மேல, கொஞ்சம் கொஞ்சமா போகத்தான் மனசு ஏங்கும்.

கொஞ்சம் மேல போனாலும் பிரச்சனைதான், அது எங்க போயி நிக்கும்னு நமக்குத் தெரியும் அதனால இதை எல்லாம் ஆரம்புத்துலேயே விலக்குறது நல்லது என்று, நாம தெளிவா ஒரு முடிவுக்கு வரும்போதே, ஆண்டவன் நமக்கு அடுத்த செக்கு வைப்பானு தெரியும்.

அவங்கட்ட இன்னும் நெருக்கமா பழகுற மாதிரி எதோ ஒரு சூழ்நிலைக்கு நம்மளத் தள்ளுவான். நமக்கு உடம்பு சரியில்லாம போகும். விழுந்து விழுந்து அவங்க நம்மை கவனிப்பாங்க, மீரா கஞ்சி வச்சு கொடுத்தால், சௌமியா கோவிலுக்குப் போனேன் உனக்காக அர்ச்சனை பண்ணேன்னு திருநீறு பூசிவிடுவா. நமக்கு நன்றி கடன் செலுத்தத் தெரியாம, இன்னும் கூட கொஞ்சம் அன்பதான் காட்டுவோம். சரி ஆரம்பத்துலயே, நேரிடையா, அவங்கட்ட நமக்கு இடையே என்ன மாதிரி உறவுன்னு வெளிப்படையா கேட்டால்? என்னாகும்? என்னவோ அவங்க தெளிவு மாதிரி?! அதுகளும் நம்மளை மாதிரித்தான, அவ்வளவு தெளிவு இருந்தா அதுக ஏன் நம்மட்ட இவ்ளோ உரிமையா பேசுதுக?

சரி, வாழ்க்கைல ரொம்ப ஆராயக் கூடாது, அப்புறம் அனுபவிக்க முடியாது, take life as it comes னு போய்ட்டே இருக்கவேண்டியதான்னு, என்னோட வேலைல கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

“ஆள் எப்படி இருப்பா?”, சின்னப் பூசணி மானிட்டர பாத்துட்டே அது வேலைய ஆரம்பிச்சது. அடுத்தவங்களைப் பற்றி தெரிஞ்சுசுக்குறதுதான் அது வேலையே.

“பார்க்க சுமாராதான் இருப்பா, ஆனால் கண்ணு செமையா இருக்கும்”,

ஒரு ரெஸ்பான்சும் இல்லை, வேலையில் மும்முரமாகக் காட்டிக்கொண்டாள்.

“செல் நம்பர் வாங்குனியா?”, இப்பொழுதும் திரும்பாமலேயே கேட்டாள்.

“ம்ஹும் இல்லை”

“குட பாய்”, சர்ட்டிபிகெட் கொடுத்துவிட்டு வேலையில் மூழ்கினாள்.

லஞ்சின்போது என்னுடைய தட்டில் காலிபிளவர் குருமாவை கொஞ்சம் வைத்தாள். அதிகம் பேசவில்லை, ஆனால் என்னைக் கொஞ்சம் கூடுதலாக கவனிப்பது போல் இருந்தது.

“ஓய் தையிர் சாதம், நைட்டு கால் பண்றேன்”, என்று கிளம்பும்போது சொன்னாள்.

என்னுடைய பதிலைக் கேட்காமலேயே சென்றுவிட்டாள். நல்லவேளை எனக்கும் அதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

வேறு எங்கும் செல்லாமல் நேரே வீட்டிற்குத்தான் போனேன். மாடி ஏறும்போது என்னையறிந்தே, மீரா கண்ணில் தென்படுகிறாளா என்று தேடினேன். கதவைத் திறக்கும் போது கூடுதலாக சத்தம் வந்தது, எப்பவும் போலத்தான திறந்தேன்? யாருக்கோ நான் வந்துவிட்டேன் என்பதைக் காட்டவேண்டும் என்று என்னையறிந்தே சத்தம் கூடுதலாக வருமாறு திறந்திருப்பேனோ?

வெற்றிடம் எதுவும்

மனது

விட்டு வைப்பதில்லை

காற்றால் நிரப்பும்

கவிதையால் நிரப்பும்

ஒலியால் நிரப்பும்

ஒளியால் நிரப்பும்

இருளால் நிரப்பும்

அலையால் நிரப்பும்

நினைவால் நிரப்பும்

எனது மனது ஏனோ கொஞ்சம் வெறுமையாக உணர ஆரம்பிக்கும்போது “மீரா…..ஆஆஆ…..”, என்ற மம்மியின் குரல் கேட்டது “மாடில துணி எடுத்துட்டு வாரேம்மா…”, என்ற பதிலும் எனது வெறுமையை விரட்டிவிட்டது.

மேலிருந்து இறங்கும்போது, வீட்டுக்குள் எட்டிப் பார்த்து  “வந்தாச்சா? என்ன இவ்வளவு சீக்கிரமா?”, என்றவாறே என்னைப் பார்த்து, “ரிலாக்ஸ் பண்ணுங்க, பத்து நிமிஷத்துல வருகிறேன்”, என்று சொல்லிவிட்டுப் பறந்தாள்.

ஒரு ஆண் ஒவ்வொரு சின்ன செயலும் செய்யுறதுக்கு ஒரு உந்து சக்தி தேவைப்படுகிறது. அப்படி ஒரு உந்து சக்தி இல்லையானால் ஒரு பெரிய அழுக்குமூட்டயாதான் எந்த ஒரு ஆணும் திரிவான். அஞ்சு நிமிஷத்துல மின்னலா முகம் கழுவி ரெண்டு கப் தேநீருடன் தயாரானேன்.

“என்ன, ஒரு ஏழு தடவையாவது ஆபிஸ்ல என்னைய நினைச்சிருப்பீங்களா?”, என்றவாறே, உள்ளே வந்து, ஒரு கப் டீ யை எடுத்து என்னெதிரில் அமர்ந்தாள்.

நான் வாயை திறக்குமுன், “எப்படி தெரியும்?, அல்லது அதெல்லாம் ஒன்னும் இல்லையே,  இது ரெண்டுல ஒன்னுதான உங்க பதில்?”.

“எப்படி தெரியும்னு கேட்டால், நான் உங்களைப் பதினாலு தடவை இன்னைக்கு நினைத்தேன். சோ அதுல பாதியாவது நெனச்சுருப்பீங்க. அதெல்லாம் ஒன்னும் இல்லையே என்பது உங்களோட பதிலாக இருந்தால், சாரி மிஸ்டர் நீங்கள் என்னிடம் முதல் பொய்யை ஆரம்பித்து இருக்குறீர்கள்”.

இவள என்ன செய்யலாம்? அப்படியே இழுத்து…..

இன்னும் இழுப்போம்….

தப்புத் தப்பாய் – 4

தப்புத் தப்பாய் – 3

தப்புத் தப்பாய் – 2

தப்புத் தப்பாய் – 1

தப்புத் தப்பாய்

Share This Post