பாகம் 8: (தப்புத் தப்பாய்…)
மறுநாள் வழக்கத்திற்கு மாறாக விடியாமல் வழக்கம்போலவே விடிந்தது. இரவு இருவரிடமும் பேசியதை அசை போட்டவாறே அலுவலகம் கிளம்பினேன். கீழே இறங்கும்போது மீரா தலை துவட்டிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவுடன் கொடியில் துண்டைப் போட்டுவிட்டு இயல்பாக சிரித்தாள். நானும் சிரித்துக் கொண்டே “காலைவணக்கம்”, என்றதற்கு “இன்றைய நாள் இனிதாக இருக்கட்டும்”, என்று பதிலித்தாள்
அலுவலகத்தில் சௌமியா, “நல்லா தூங்கிட்ட போல?”
“நல்ல தூக்கம் ஆனால் கனவில் உங்களோட சேலை என் முகத்தை தடவி சென்றவாறு இருந்தது.”
“இருக்கும், இருக்கும் வேலையைப் பாரு”, என்றவள் முகத்தில் ஒரு சின்ன பளிச் வந்து மறைந்தது.
இன்றைய நாள் மிக லேசான நாளாக இருக்கும் என்று தோன்றியது.
அடுத்தடுத்த நாட்களும் வேகமாக நகர்ந்தன. மீரா இப்பொழுதெல்லாம் என்னைப் பார்க்க வரும்போது அன்று எழுதிய கவிதைகளுடன் வருகிறாள், அல்லது நேற்றைய கனவுகளுடன் வருகிறாள்.
அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும், தேர்ந்தெடுத்து மிக கவனமாக, எசசரிக்கையாக பேசாமல், வெகு இயல்பாக, மனதில் தோன்றியதை, சரளமாக பேசுகிற மாதிரி இருக்கிறது. ஒரு பெண்ணாக நினைக்காமல் ஒரு நல்ல சினேகிதனாகவே, அவளை என்னால் பார்க்க முடிந்தது. எனக்கே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவள் மேல் கொஞ்சம் கூட உடல் சம்பந்தமான ஈர்ப்பு வரவில்லை.
நான் அன்று வெளிப்படையாக பேசியதன் காரணமாகவும் இருக்கலாம், மீராவின் இயல்பான அணுகுமுறையாகவும் இருக்கலாம்.
மனதை லேசாகத் திறந்தால் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது உடல் மூலமாகவோதான் நம்முடைய உணர்வுகள் வெளிப்படுகின்றன.
சௌமியாவும் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தாள். எப்பவும் கிண்டல் தெறிக்கும் அவள் பேச்சில் இப்போது கொஞ்சம் முதிர்ச்சி தென்பட்டது. எனக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
பொதுவாகவே என்னுடன் பழகுபவர்கள் கொஞ்சம் முதிர்ச்சியாக நடந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கும், அரைகுறை டிக்கெட்டுகளை நான் எப்போதும் விரும்புவதில்லை.
இதற்கு ரெண்டு காரணம், ஒன்று இந்த வெகு ஜனங்களிலிருந்து மாறுபட்டவன் என்று காட்டிக் கொள்ளுவதில் உள்ள விருப்பத்தின் காரணமாக நான் எப்போதும் சாதாரண வெட்டி அரட்டை பண்ணுவதில்லை,
ரெண்டாவது எனக்கும் நான் நெருங்கிப் பழகும் அவளுக்கும் (சௌமியாவோ, மீராவோ, மாலதியோ) இன்னும் நெருக்கம் அதிகமாகி, அதிகமாகி, வரம்பை மீறும் நிலை வந்தால், இருவரும் ஒன்றுசேர கோட்டுக்கு அந்தப் பக்கம் காலை எடுத்து வைக்கவேண்டும். ஒருவர் மற்றவரை, கோட்டுக்கு அந்தப் பக்கம் இழுத்துவிடக்கூடாது.
ஆனால் சௌமியாவின் இந்த முதிர்ச்சி எனக்கு பயம் கொடுப்பதன் காரணம் ஆரம்பத்தில் கொஞ்சம் அரைகுறையாக இருந்து இப்போது திடீரென முதிர்ச்சி காட்டுவதுதான்.
போகட்டும் ஏதாவது பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று இருந்தேன். வந்துவிட்டது, எனக்கு இரண்டாயிரம் ரூபாயில் ஒரு சர்ட் எடுத்து ஒரு திங்களன்று காலை வந்தவுடன் கொடுத்தாள்.
“என்ன சௌமியா இது? இரண்டாயிரம் ரூபாய்க்கு? எனக்கா? ஏன்?”
“பெருசா ஒன்னும் இல்ல, நேற்று அவருடன் பர்ச்சேஸ் போயிருந்தேன் இந்த சர்ட் நல்லா இருந்துச்சு அவருக்கு இது பிடிக்கலை, உனக்கு நல்லா இருக்கும்னு தோணுச்சு எடுத்தேன்”.
“அவருக்குத் தெரியுமா”
“ம்ம்ம்”
“அவரு ஒன்றும் சொல்லலையா?, தப்பா எடுத்துக்க மாட்டாரா?”
“ஒரு சின்ன பொய் சொன்னேன்”
“என்ன”
“ஹரிக்கிருஷ் எனக்கு நெறைய உதவி செஞ்சுருக்கான் அதனால அவனுக்கு ஏதாவது ஒரு அன்பளிப்பு கொடுக்கணும், இந்த சட்டை அவனுக்கு நல்லா இருக்கும் வாங்கி கொடுக்கவானு கேட்டேன், அவரு வாங்கி கொடுன்னாரு, அவ்வளவுதான்”.
“ச்சே என்ன மனுஷன் அவரு! தெய்வமே, தெய்வமே… இந்த மாதிரி ஒரு கணவனத்தான் நாம ஆம்பளைன்னு சொல்லணும் சௌமியா, எங்க இருந்தோ ஒருத்தர் அவருக்குத் தெரியாமலேயே
எனக்குத் துணி வாங்கி கொடுத்து
என்னைய அம்மணமா ஆக்கிட்டாரு”.
“என்னடா ரொம்ப எமோசனலா ஆய்ட்ட?”
“ரியலி நீ கொடுத்து வச்சவ சௌமியா, நான் அவரை சந்திக்கணும், இப்ப சொல்றேன் நம்ம நட்பு எப்பவும் தொடரும், குடும்ப நட்பா தொடரும்”
“இதுதான் எனக்கு வேணும்டா, எப்படி யோசிச்சாலும்
உணர்வுகளோட உறவுகள் பெருசு
உணர்வுகள் சட்டுன்னு வந்துட்டு
அதோட தேவைய நிறைவேத்திட்டு
சட்டுன்னு காணாமப் போய்டும்,
அதோட விளைவுகள் பயங்கரம்மா இருக்கும்.
உறவோ மெள்ள மெள்ள மலரும்
பூத்துக் குலுங்கும்போது
அது தெய்வீக நறுமணம் பரப்பும்
அழகான உறவுகள் எப்போதும்
அடிமையாக்காது
எனக்கு நம்பிக்கை வந்துருச்சு நம்ம நல்ல நண்பர்களா இருப்போம்னு அதுக்கு அடையாளமாதான் இந்த சட்டை, அன்பா குடுக்கிறேன் ஆசையா இல்லை”, என்றாள்.
வார்த்தைகளின் வலிமை?! வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது
தடம் மாற நினைக்கும் உறவுகளைக்கூட
வார்த்தைகள் அழகாக இடம் மாற்றிவிடும்.
சௌமியா அவளது கணவனிடம் வெளிப்படையா கேட்டதால் அவரும் தப்பாக எடுத்துக்காம வாங்கிக்கொடு என்று சொல்லிருக்காரு.
தப்புத் தப்பாய் எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணம், தப்புத தப்பாய் பேசுவதுதான்,
தப்புத் தப்பாய் பேசுவதற்கு காரணம் தப்பான எண்ணங்கள்தான்
தப்புத் தப்பாய் எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணம் தப்புத் தப்பான வார்த்தைகள் மனதில் பதிவதினால்தான்,
நீ உருப்பட மாட்ட என்ற வார்த்தைகள் ஒரு மாணவன் மனதில் பதிந்தால் அவனுக்கு தப்புத் தப்பான எண்ணங்கள்தான் தோன்றும்.
உன்னைய தப்பா புரிஞ்சிகிட்டேன்னு யாராவது உங்கட்ட சொன்னால் அதுல உங்களுக்கும் பங்கு இருக்கு அதாவது உங்க வார்த்தைகளுக்கோ, உங்க செயல்களுக்கோ.
என்னைப் பொறுத்தவரையில் மொழியாலோ சைகையிலாலோ சொல்லப்படும் வார்த்தைகள்தான் கடவுள். அதுதான் ஆக்கவோ அழிக்கவோ செய்யும்.
வார்த்தையை கவனமாக உபயோகிப்பவன்
குடும்ப உறவுகளை சிதையாமல்
கட்டி இழுக்கிறான்
வார்த்தைகளை சிந்தித்து செலவழிப்பவன்
சக்தியுள்ள தலைவனாகிறான்
முறையான வார்த்தைகளை
முன்வைப்பவன்
தப்புத் தப்பான எண்ணங்களைத்
தவிர்க்கிறான்.
Thank wor(Go)d!
தப்புத் தப்பாய், தப்பாக முடியாமல் சரியான முடிவுக்கு வந்துவிட்டது