தமிழன்டா

தமிழன்டா

என்ன பிரச்சனை வந்துவிட்டது தமிழனுக்கும்? தமிழுக்கும்? ஏன் இப்பொழுது ஆள், ஆளுக்கு நான் தான் தமிழன்டா, நான் தான் தமிழைக்காக்க வந்த ரட்சகன் என்று நாள் தோறும் அறிக்கை விடுகிறார்கள்?

தமிழ் கலாசாரத்தைக் கட்டிக்காப்பேன் என் அருமை தமிழ்மக்களே என்று குரல் கொடுக்கும் ஒருவர் ஏன் எப்பொழுதும் ஜீன்ஸ் பேண்ட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை! இதுல ரெபிடெக்ஸ் இங்கிலிபிஸ்வேற!

தமிழன்டா என்று இனப்பற்றை காட்டிக்கொள்ள தமிழை கருப்புச்சட்டையாக கண்ட இடத்திலும் அணிந்துகொண்டு திரிபவர்கள் யாரேனும் சாதிவித்தியாசம் பார்க்காமல் இன்னொரு தமிழன் வீட்டில் சம்பந்தம் பேசத் தயாராக இருக்கிறார்களா?

கீழ்சாதி தமிழன் வீட்டிலிருந்து பெண் எடுக்கவோ பெண் கொடுக்கவோ தயாராக இருக்கிறார்களா?

தமிழ்ப் புத்தாண்டையே தை முதல் நாள் தான் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை விட்ட தமிழின் தலைவர் பிறந்த தினத்தை எதற்கு ஆங்கில தேதியில் கொண்டாடுகிறார் என்று அக்கட்சியினர் தான் விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டைத் தமிழன் தான் ஆள வேண்டும் என்று கூச்சலிடும் எந்தத் தமிழனும்,

மொரீஷியஸில் தமிழன் தலைவன் ஆனோலோ,

கூகுலின் தலைமைக்குத் தமிழன் வந்தாலோ,

அமெரிக்காவில் உச்சநீதிமன்றத்தில் தமிழச்சி

நீதிபதியாகப் பொறுப்பேற்றாலோ,

கொண்டாடத் தயங்குவதில்லை.

நம்திறமைக்கு உலகளாவிய வரவேற்பு இருப்பதைப் போலத் தான் நாமும் பிறமாநிலத்தவரின் திறமையை மதித்து தமிழ்நாட்டிற்குள் அனுமதித்தால் தான் தமிழகம் முன்னேறும். இப்படியே போனால் தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநில ஐ. ஏ. எஸ், ஐ. பி.எஸ் அதிகாரிகளையும் உள்ளே விடக்கூடாது என்று சொன்னாலும் சொல்வார்கள் இந்தத் தமிழ் வெறியர்கள்.

தமிழ்நாட்டை ஆளும் தகுதி எந்த தமிழனுக்கும் இல்லை, எனவே தான் நான் தலைமை ஏற்கவிரும்புகிறேன் என்று விடுதலை பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுத்த கர்நாடகரான தந்தைப் பெரியார் தமிழகத்துக்கு மட்டுமல்ல பெண்குலத்தையே தலைநிமிரச் செய்தவர் என்பதை மறுக்க முடியுமா?

இப்படி நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம். சரி, கொஞ்சம் நடைமுறை வழக்கத்தைப் பார்ப்போம். சென்றவருடம் மரினாவில் நடந்த உலகையே திருப்பிப் பார்க்கவைத்த போராட்டத்திற்கு வருவோம்.

ஜல்லிகட்டை வெற்றிகரமாக நடக்க வைத்து விட்டார்கள். தமிழ் கலாச்சாரத்தைக் கட்டி காப்பதற்காக போராடினார்கள் என்பதை விட

நம்மைக் கவர்ந்த ஒரு முக்கியமான விஷயம் பெப்சி,  

கோக் போன்ற பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களை ஊத்தி மூட வைத்து விடுவார்கள் 

என்பதுதான். போராடிய இளைஞர்களின் வெறித்தனமான அறிக்கைகளைப் பார்த்தவுடன் ஜில்லுனு ஒரு நுங்குப்பதனி குடித்தது போல உள்ளம் குளிர்ந்து போனோம். ஆனால் இன்று கடை தோறும் பொங்கி வழிகிறது பெப்சியும், கோக்கும்?யார் மறுபடியும் ரத்தின கம்பளம் விரித்தார்கள் அதே இளைஞர்கள் தானே?

அப்பாவித் தமிழன்,  தம்மை வழிநடத்தும் தலைகள் வீட்டுப்பிள்ளைகள் எத்தனை மொழிகள் கற்றுக் கொள்கிறார்கள், எந்தப் பள்ளியில், எந்த மாநிலத்தில், எந்த நாட்டில் படிக்கிறார்கள் என்பதைப் பார்த்து கொண்டே தான் தன்னுடைய தலைவர் கட்டளைக்கிணங்க தமிழுக்காகப் போராடுகிறான்.

அடேய் ஒரு போண்டா சாப்பிடனும்னாலே மாவு ஒரு மாநிலத்திலிருந்தும், எண்ணெய் ஒரு  மாநிலத்திலிருந்தும், எரிபொருள் ஒரு நாட்டிலிருந்தும் வரவேண்டும்டா இதுல தனித்தமிழ்நாடு என்று ஒரு கோஷ்டி அலையுது என்ற கவுண்டமணியின் நக்கல் தான் ஞாபகம் வருது.

தமிழ்நாட்டுல ஆரம்பித்துள்ள அல்லது செயல் பட்டுக் கொண்டடிருக்கும் ஆபத்தான திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டை மாற்றி, மாற்றி ஆண்டு கொண்டிருக்கும் இந்த இரண்டு திராவிடக் கட்சிகளின் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்திருக்க முடியுமா?அனுமதி கொடுத்தது இந்த இரண்டு கட்சிகள் தான், ஆனால் மத்திய அரசாங்கம் தமிழகத்தை வஞ்சித்து  விட்டது என்று இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து புலம்புவது எதற்கு என்று புரியவில்லை.

தமிழ் மொழியையோ, தமிழ் கலாச்சாரத்தையோ குழி தோண்டிப் புதைக்கனும்னா தமிழன் நினைத்தால் தான் முடியும். லெட்டர்பேடு கட்சியெல்லாம் தமிழ்கோக்ஷம் போடுறதால நோட்டாவை விட கொஞ்சம் கூடுதலா ஓட்டு வாங்கலாமே தவிர சீட்டு வாங்க முடியாது.

தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரம் என்று கூவுறத விட்டுட்டு உருப்படியா தமிழின் வளர்ச்சிக்கு என்ன செய்தோம்? என்ன செய்யலாம்னு யோசிச்சா நல்லா இருக்கும்.

பின்குறிப்புஇந்த கட்டுரைக்கு ஆக்க பூர்வமான விமர்சனங்கள், அல்லது மாற்றுக் கருத்துகள் இருந்தால் அனுப்பவும். இப்படி எழுதியிருக்கியே நீயெல்லாம் தமிழனா?என்று கேட்பதால தமிழ் வளர்ந்திடாது தமிழனே!

Share This Post

Leave a reply