திசை மாற்றும் பறவைகள் (மாதா பிதா குரு)

திசை மாற்றும் பறவைகள் (மாதா பிதா குரு)

திசை மாற்றும் பறவைகள் (மாதா பிதா குரு):

ஒரு தந்தை பள்ளியில் படிக்கும் மகனிடம் கேட்டார் “புதுசா பென்சில் எப்படி உன் பையில் வந்தது என்று?”, மகன் சொன்னான் “என்னுடைய வகுப்புத் தோழனிடம் இருந்து சுட்டேன்”, என்று. தந்தை சொன்னார் “திருடுவது தப்பு, என்னிடம் கேட்டிருந்தால் என்னுடைய அலுவலகத்திலிருந்து எடுத்து வந்திருப்பேன்ல!?” என்று. அவர்தான் மிகப்பெரிய திருடன்.

இது முதலில் நகைச்சுவையாக இருந்தது. ஆனால் இப்போது சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த போட்டி உலகத்தில் வெற்றிபெற வைப்பதற்காக எல்லா தகிடு தத்தங்களும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் பீகாரில் ஒரு மேல் நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிட் எடுத்துக்கொடுத்து உதவுவதற்காக அந்த பள்ளிகட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் சன்னலில் தொங்கிக்கொண்டு இருப்பதை செய்த்தித்தாள்களில் பார்த்து அதிர்ந்தோம். இந்த தலைமுறை தவறாக வழிநடத்தப்படுவதில் பெற்றோகள் அதிகப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறார்கள்!

ஒரு தந்தை மகனிடம் சொன்னார் யாராலும் காற்றை கையில் பிடிக்க முடியாது என்று. அதற்கு மகன் கேட்டான் என்னுடைய ஆசிரியராலும் முடியாதா?, என்று. ஆசிரியர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் மாணவர்கள். மாணவர்களது நம்பிக்கையை பொய்யாக்காமல் ஆசிரியர்களே தேர்வு அறையில் மாணவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கான கேள்வித்தாளை வாட்ஸ் அப்பில் அனுப்பியதற்காக ஓசூரில் நான்கு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவனைத் தவறாக வழிநடத்தினால் நாளைய சமூகம் எப்படி இருக்கும்? நாளை அவன் தப்பு செய்யும் பொழுது நீங்கள் அவனை எப்படி கண்டிப்பீர்கள்? அவன் உங்களை எப்படி மதிப்பான்? ஏற்கனவே பிள்ளைகள் பெற்றோர்களை வயசான காலத்தில் பார்ப்பதில்லை, மாணவர்கள் ஆசிரியர்கள் சொல் கேட்பதில்லை. அதற்கு காரணம் யார்? பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான்.

எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளையே குறை சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இங்கு கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் எந்த ஓர் விஷயமும் தேர்வின்போது நடக்காது. அவர்களில் ஒருசிலர் உடந்தைகளாக இருக்கிறார்கள். ஒரு கல்வி அதிகாரியும் சஸ்பண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

சில பள்ளிகளில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் வருவதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பல குறுக்குவழிகளை கையாளுகின்றனர். வெட்கக்கேடு! இதற்குப் பெயரும் திருட்டுத்தனம்தான். அதில் சம்பத்தப்பட்ட அனைவரும் திருடர்கள்தான். தனியார் பள்ளிகளில் நிலைமை மிகவும் மோசம். சில மாணவர்களின் பெற்றோர்களே ஆசிரியர்களாக இருக்கும்போது அவர்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி தங்களுடைய பிள்ளைகளின் தேர்வு அறைக்கு யார் சூப்பர்வைசர்களாக வரவேண்டும் என்று ஏற்பாடு செய்கிறார்கள்.

சமீபத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சாட்டை என்று ஒரு திரைப்படம் வந்தது. சில தவறாக வழிநடத்தும் ஆசிரியர்களை கிழி, கிழியென கிழித்திருந்தார். இந்த தப்பில் ஈடுபடும் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் வெளுப்பதற்கு ஒரு சாட்டை இல்லை, நூறு சாட்டைகள் வைத்து அடித்தாலும் தகும்.

கடினமாக படித்து ஒழுங்காகத் தேர்வு எழுதும் மாணவர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். குறுக்குவழியில் சென்று அவர்களை விட அதிக மதிப்பெண் பெறும் சில மாணவர்களுக்கு நீங்கள் உதவுவது நல்ல மாணவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா?

இதுமாதிரி தப்பான வழியில் ஈடுபடும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள் தாங்கள் எப்படி தங்கள் பிள்ளைகள்க்கு தேர்வு அறையில் காப்பி அடிப்பதற்கு ஏற்பாடு செய்தோம் என்று!

(சுருக்)கமாகச் சொன்னால் “த்தூ….” இப்படி பொழைக்கனுமா…., இப்படி செய்துதான் உங்கள் பிள்ளைகளை பொழைக்க வைக்கனுமா?.

Share This Post