திருட்டு சி.டி யை ஒழிக்க முடியுமா?

திருட்டு சி.டி யை ஒழிக்க முடியுமா?

சமீபத்தில் நடிகர் விஷால் சில சி.டி. கடைகளுக்கு திடீர் விசிட் செய்து பூஜை, கத்தி போன்ற தீபாவளிக்கு ரிலீசான படங்களின் திருட்டு சி.டி.க்களை கைப்பற்றினார். ஏற்கனவே கமலும், பார்த்திபனும் இந்த முயற்சி செய்துள்ளனர். இது காவல்துறையில் கடுப்பை கிளப்பிவிட்டுள்ளது. நம்முடைய பிரச்சனை அதுவல்ல. ஏன் திருட்டு சி.டி யை இவ்வளவு காலம் ஒழிக்கமுடியவில்லை? எப்பொழுதும் பொதுமக்களை மட்டும் குறை சொல்கின்றனர் திரைப்படத்துறையினர். இந்த பிரச்சினை பற்றி இயக்குனரும், நடிகருமான சேரன் தன்னுடைய c2home ஆரம்ப விழாவில் தெளிவாக அலசி ஆராய்ந்து கருத்து தெரிவித்துள்ளார். நம் பங்குக்கு நமக்குத் தெரிந்த சில உண்மைகளை கொடுத்து இருக்கிறோம். திரைத்துறையினர் கவனத்துக்காகத்தான் இந்த கட்டுரை. முதலில் சில உண்மைகளை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

  • பொதுமக்களிடம் அதிகம் வரவேற்பு உள்ள எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு எளிதாக யாரும் கட்டுப்படுத்தி விடமுடியாது. அவர்கள் அதில் சட்டத்தை மீறவே செய்கிறார்கள். எ.கா. ஹெல்மட் போடுவதை இருசக்கரவாகன ஓட்டிகள் விரும்புவதில்லை, அது உயிர் பற்றிய பிரச்சனையாய் இருந்தாலும்.
  • சினிமாவை ஒரு பொழுதுபோக்கும் சாதனமாகவே கருதுவதால் அதிக பணம் செலவழிக்க மக்கள் விரும்புவதில்லை.
  • தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை யாரும் தடுக்கமுடியாது. இது ஏற்கனவே கமலஹாசன் சொன்னதுதான்.
  • சினிமா மட்டும் அல்ல நோய்கள் வந்தால் கூட மருத்துவரிடம் செல்லாமல் நெட்டில் மருந்தை பார்த்து எடுத்துக்கொள்கிறார்கள் நம் மக்கள். (இதுவும் உயிர் பற்றிய விஷயமாக இருந்தாலும்) எந்த மருத்துவரும் மக்கள் கண்டிப்பாக மருத்துவமனைக்குத்தான் வரவேண்டும் என்று புலம்புவதில்லை.
  • விஷால் கடைகளில் சோதனை செய்தார். நல்லது அவரால் யாருடைய சட்டைப்பையிலாவது சோதனை செய்ய முடியுமா? ஏன் கேட்கிறோம் என்றால் மொபைலில் டவுன் லோடு செய்து அதிலேயே படமும் பார்த்துவிடுமளவுக்கு தொழில் நுட்பம் போய்விட்டது. அதை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்?
  • இன்னொரு முக்கியமான விஷயம், எத்தனை நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்துறையினர் திரை அரங்கிற்கு வந்து புதுப்படங்களை பார்க்கிறார்கள்? அனைவரது வீடுகளிலும் சோதனை செய்யுங்கள் எல்லா பட சி,டி,களும் சிக்கும்.

நீங்கள் மட்டும் சட்டவிரோதமாக பார்க்கலாமா?

  • கொரியபடங்களை சி.டி.யில் பார்த்துவிட்டு அனுமதி இல்லாமல் அதை ரீ மேக் வேறு செய்கிறீர்கள்? அதெல்லாம் நியாயமா?
  • திரை அரங்கிற்கு வந்து படம் பார்த்தால் மக்கள் பர்சிலிருந்து ஒவ்வொரு படத்திற்கும் ஐநூறு ரூபாயாவது எடுத்துவிடுகிறீர்கள். அதில் எவ்வளவு அரசுக்கு செல்கிறது? முறையாக வரி எல்லாம் கட்டுகிறீர்களா?
  • திரைத்துறையினரின் வரி ஏய்ப்பு பட்டியலை எடுத்தால் வாய்கிழிய திருட்டு சி.டி பற்றி பேசும் பல திரைபடத்துறையினரின் முகமூடி கிழியும்.

 

சேரன், கமலஹாசன் முயற்சி செய்வதுபோல திருட்டு சி.டி., திருட்டு சி.டி என்று புலம்பாமல் அதை எப்படி நாமே மார்கெட்டில் கொண்டுவரலாம் என்று யோசிப்பது நல்லது.

Share This Post