தேவையா இந்த சடங்குகளும், சம்பிரதாயங்களும்?

தேவையா இந்த சடங்குகளும், சம்பிரதாயங்களும்?

நம்முடைய முன்னோர்கள் சில சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மிகவும் கடுமையாக பின்பற்றினார்கள். அதை மிகவும் எளிமையாக வெளிப்படுத்தவும் செய்தனர். ஆனால் நாம் எதற்கு இந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று அறிவாளித்தனமாக கேள்வி கேட்கிறோம். நிறைய சடங்குகளை நாம் மறந்துவிட்டோம். சிலவற்றை நாம் பின்பற்றுகிறோம். அதுவும் அதன் அர்த்தம் தெரியாமலேயே சும்மா கடமைக்காக செய்கிறோம். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் தெரிந்தால் மிகவும் வியந்து போவோம். ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்,

ஒரு கிராமத்தில் ஒரு 25 வயதுள்ள ஆண் இறந்துவிட்டான். அவனுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அந்த வீட்டின் முன்புறம் அந்த ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தனர். வீட்டின் உள்ளே பெண்கள் அழுதுகொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்து ஒரு வயதான பெண் ஒருத்தி வெளியே வந்தாள். அவள் கையில் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் இருந்தது. அதை தூக்கி எல்லாருக்கும் காண்பித்தாள். கூட்டம் மிக வருத்தம் அடைந்தது. பின்பு அந்த சொம்பை கீழே வைத்து தன்னுடைய கையில் இருந்து ஒரு பிச்சிப்பூவை எல்லோருக்கும் காட்டி அந்த தண்ணீரில் போட்டாள். கூட்டம் அதை கவனித்தது. பின்பு இரண்டாம் பூவை போட்டாள். பின்பு மூன்றாம் பூவை போட்டாள். கூட்டம் அதனை எண்ணியது. பின்பு அந்த தண்ணீரை கீழே கொட்டிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

இதை பார்த்து அனைவரும் மிகவும் வருத்தம் அடைந்தனர். இதன் அர்த்தம் என்ன? சொம்பு நிறைய தண்ணீர் என்பது அந்த இறந்தவனுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்று குறிக்கிறது. மூன்று பிச்சிப்பூ என்பது அவள் மூன்று மாதம் கற்பம் என்பதை குறிக்கிறது. கணவன் இறந்தபிறகு அந்தப் பெண் குழந்தை பெற்றால் அவளைப்பற்றி அந்த ஊரில் யாரும் தப்பாக நினைக்க கூடாது என்பதற்காகத்தான் அப்படி ஒரு சடங்கை செய்தாள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், எவ்வளவு நாகரிகமாக ஒரு வார்த்தையும் பேசாமல் ஒரு விஷயத்தை ஒரு கூட்டத்துக்கே சொல்ல முடிகிறது என்று. இப்படி எவ்வளவோ விஷயங்கள் மிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நாம் அதை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் நம்மால் வியக்காமல் இருக்கமுடியாது.

Share This Post