பிறந்த தினமும் உங்கள் குணமும்

பிறந்த தினமும் உங்கள் குணமும்

நம்முடைய வெற்றுப்பக்கத்தில் நிறமும் குணமும் என்ற தலைப்பில் உங்களுக்கு பிடித்த நிறத்துக்கு உங்களுடைய குணமும், மலரும் மனமும் என்ற தலைப்பில் உங்களுக்கு பிடித்த மலருக்கு உங்களுடைய குணமும் கொடுத்து இருந்தோம். நல்ல வரவேற்பு இருந்தது. அதை தொடர்ந்து இப்போது இன்னும் கொஞ்சம் நம்பிக்கையுடன் நீங்கள் பிறந்த கிழமைக்கு உங்களுடைய குணம் எப்படி இருக்கும் என்ற ஒரு அசாத்திய கணிப்புடன் ஒரு முயற்சி செய்திருக்கிறோம். வழக்கம்போல் சும்மா படிச்சு பாருங்கள். படிச்சது பிடிச்சிருந்தா உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. இல்லைனா விமர்சனம் பண்ணுங்க.

திங்கள்கிழமை:

கொஞ்சம் அழுத்தமான ஆள்தான். எல்லாரும் நீங்க ரொம்ப கூலான ஆளுன்னு நினைப்பாங்க. ஆனால் உங்களுக்குள் அடிக்கிற புயலை கண்ணீர் என்ற மழையாக மாற்றாமல் மனசுக்குள் சமாதி கட்டுவது எப்படி என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். காலங்கள் போனாலும் சிலவற்றை எப்போதும் பசுமையாக மனசுக்குள் வைத்திருப்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கான நேரம் வரும்வரை பொறுமையாக காத்திருப்பீர்கள். குறிப்பிட்ட நண்பர்களை மட்டுமே உங்களுடைய நெருக்கத்தில் வைத்திருப்பீர்கள். அதுவும் அவர்களால் உங்களுக்கு ஒரு பயனும் இருக்காது, உங்களால்தான் அவர்களுக்கு பயன். எளிமை உங்களுக்கு பிடிக்கும். அந்த எளிமையினால்தான் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். நம்பிக்கை துரோகம் உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானது. ஏனெனில் அதை எப்படி அழகாக உருவாக்குவது என்பது உங்களுக்கு தெரியும்.

செவ்வாய்கிழமை:

எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். ஆனால் உங்களிடம் ஒரு வேலை வாங்குவதென்பது ரொம்ப கஷ்டம்தான். மற்றவர்களை கவனிப்பதில் உங்களுக்கு இஷ்டமில்லை, ஏனென்றால் உங்களையேதான் நீங்கள் அடிக்கடி பார்த்துக்கொண்டு இருப்பீர்கள். கடவுள் மேல் கொஞ்சம் குழப்பமான பக்தி இருக்கும். நெறைய சென்டிமெண்டல் ஆள் நீங்கள். அழுகை உங்களுக்கு பொங்கி வரும். உணர்ச்சிவசப்பட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்ன செய்வீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. உடன் இருப்பவர்களை குழப்பியே கொன்றுவிடுவீர்கள். எதையும் கிளிப்பிள்ளைக்கு சொல்றமாதிரி உங்களுக்கு சொல்லணும். ரொம்ப பாசமான ஆளு. ஆனால் அதனாலயே நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். அடிக்கடி தனிமை உலகத்திற்கு சென்றுவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான்.

புதன்கிழமை:

எதிலும் ஒரு நியாயம் இருக்கவேண்டும் என்று துடிப்பீர்கள். உங்களுடைய விஷயத்தில் உங்களால் நியாயமாக நடக்க முடியாத சமயத்தில் மிகவும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகுவீர்கள். அடுத்தவர்களுக்கு எது சரியானது என்று அழகாக தேர்ந்தெடுத்து கொடுப்பீர்கள். ஆனால் உங்களுக்கு தேர்ந்தெடுப்பதில் நிறைய தயக்கம் இருக்கும். அறிவுரைகளை உங்களிடம்தான் கேட்கவேண்டும், அறுத்தே கொன்றுவிடுவீர்கள். எதையும் சட்டென புரிந்து கொள்வீர்கள். நிறைய அனுபவங்கள் உங்களுக்கு இருக்கும். தாமரை நீரில் எப்படி ஒட்டாமல் ஆனால் நீருக்குள்ளயே இருக்குமோ அப்படி எந்த இடத்திலும் இருப்பீர்கள். நாகரீகமாக இருக்க வேண்டும், இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளவேண்டும் என்ற கொள்கை உள்ளவர். உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் சமாளித்துக்கொள்வீர்கள்.

வியாழக்கிழமை:

ரொம்ப சக்திவாய்ந்த ஆள் நீங்கள். பெரிய பதவிகளை எளிதில் அடையக்கூடிய தகுதி உங்களிடம் இருக்கிறது. ரொம்ப அலட்டிக்காமல் பெரிய காரியங்களை எளிதாக முடித்துவிடுவீர்கள். தேவை இல்லாத விஷயங்களில் தலையிடமாட்டீர்கள். உங்களுடைய வழி தனி வழிதான். எல்லா வேலைகளையும் செய்யமாட்டீர்கள். நிறைய பிரெஸ்டிஜ் பார்க்கிறவர் நீங்கள். யாராவது பெரிய ஆட்களை பார்த்து எதாவது காரியத்தை முடிக்கவேண்டும் என்றால் உங்களிடம் சொன்னால் போதும். உங்களுடய நட்புவட்டாரம் கொஞ்சம் பெரிய இடமாகத்தான் இருக்கும். சாதாரண ஆட்களிடம் அவ்வளவாக பழக்கம் வைக்கமாட்டீர்கள். ஒன்றுமே இல்லாவிட்டாலும் சட்டையில் அழுக்குபடக்கூடாது என்று நினைப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையை இப்படித்தான் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று அதிகம் அலட்டிகொள்ளமாட்டீர்கள்.

வெள்ளிக்கிழமை:

   எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதையும் மீறி சிரிக்கத் தெரிந்த ஆள் நீங்கள். உங்களுக்கு சின்ன பிரச்சனைகள் எல்லாம் வராது. எல்லாம் பெரிய பெரிய பிரச்சனைதான். ஆனால் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீர்கள். என்ன செய்வது வாழ்க்கைனா அப்படித்தான் இருக்கும், இதெல்லாம் நேரம், கடவுள் செயல் என்று ஏற்றுக்கொண்டு போய்க்கொண்டே இருப்பீர்கள். யாரையும் எளிதில் நம்புவீர்கள். எல்லாரும் உங்களிடம் அவர்களுடைய பிரச்சனைகளை கொட்டி தீர்த்து விடுவார்கள். உங்களுடைய பிரச்னையும் மீறி அவர்களுக்கும் ஆறுதல் சொல்வீர்கள். உங்கள் முகத்தில் ஒரு குழந்தை தனம் இருக்கும், கொஞ்சம் தேஜசும் இருக்கும். எதிர்பாலினர் உங்களிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பார்கள். உங்களுக்கு தெரியாமலேயே உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வலையம் இயற்கையாகவே இருக்கும். உங்கள் வாழ்க்கை எப்பவும் கல்லெறிஞ்ச குளம் போல்தான் இருக்கும்.

சனிக்கிழமை:

மிகவும் தெளிவான ஆள் நீங்கள். நம்புனவங்களுக்கு சொர்க்கம் நீங்கள். எதிலும் சுறுசுறுப்பு. உங்களை நம்பி ஒரு கூட்டத்தையே ஒப்படைக்கலாம். தலைமை தாங்கும் பொறுப்பு எப்பொழுதும் உங்களை தேடி வரும். உங்கள் வாசலில் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். உங்களுக்கு பிரைவசி கிடைக்காது. அடுத்தவங்க வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வீர்கள். அதிர்ஷ்டக்கல், எளிதில் பணக்காராவது எப்படி என்பது போன்ற சிந்தனைகள் உங்களுக்கு உண்டு. எவனும் தேவையில்லை, என்னை நான் பார்த்துகொள்வேன் என்று அடிக்கடி சொல்வீர்கள். அதுபோலவே நடுத்தெருவுக்கு வந்தாலும் மீண்டும் எளிதில் பழைய நிலைமைக்கு வரக்கூடிய திறமை உங்களிடம் இருக்கு. உங்களை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். பண விஷயத்தில் ரொம்ப நாணயமாக நடந்துகொள்வீர்கள். உங்கள் வாழ்க்கை நிறைய மேடு பள்ளங்கள் நிறைந்தது.

ஞாயிற்றுக்கிழமை:

எதற்கும் கவலைப்படமாட்டீர்கள். எப்பவும் சந்தோசமான ஆள் நீங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று அடிக்கடி சொல்வீர்கள். நல்ல திறமைசாலி. எந்த விஷயத்தைப்பற்றி கேட்டாலும் சொல்வீர்கள். உங்களிடம் ஒரு வசீகரம் இருக்கும். வேலை இருக்கும்போது ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இல்லையெனில் நல்லா படுத்து தூங்குவீர்கள் அவ்ளோ சோம்பேறி. நல்லா ஊர் சுத்தணும், விருந்தில் கலந்துக்கணும், ஆட்டம், பாட்டம் பார்க்கணும் அது போதும் உங்களுக்கு. எவ்ளோ டென்ஷனான பதவியில் இருந்தாலும் நல்லா அனுபவிக்கத் தெரிந்தவர் நீங்கள். நல்லா படிக்கிற திறமை இருக்கும் உங்களிடம். எந்த கலையையும் எளிதில் கற்றுக்கொள்வீர்கள். யாரையும் தொந்தரவு கொடுக்கமாட்டீர்கள். ஜென்டில்மேன் என்று பெயர் வாங்குவீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். உங்களுடைய வாழ்க்கை போர்க்களமாக இருந்தாலும் புன்னகைதான் உங்கள் ப்ளஸ் பாயின்ட்.

 

Share This Post