பூரண மதுவிலக்கு

பூரண மதுவிலக்கு

சமூக வலைத்தளங்களில் உள்ள நமக்கு தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு இருக்கிறது என்று நிரூபிக்க நீங்கள் தயாரா?

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டதில் சமூகவலைதலங்களின் பங்கு மகத்தானது. சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளைப்பற்றிப் பகிர்ந்துகொண்ட தகவல்களும், சில அப்பட்டமான உண்மைகளும் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணி இருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால் இது நம்முடைய அரசியல்வாதிகளுக்குத் தெரியாது. அவர்கள் நாம் ஏன் தோற்றோம் என்று இன்னும் தெளிவாக ஒரு முடிவுக்கு வருவதில் கூட முயற்சி செய்யாமல் இருக்கிறார்கள். இதோ அடுத்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதில் நம்முடைய அரசியல் தலைவர்கள் இப்பொழுதே வியூகம் அமைக்கத்தொடங்கி விட்டார்கள். நாமும் நம்முடைய பொறுப்பை உணர்ந்து கொண்டு இப்பொழுதே செயல்பட ஆரம்பிக்கவேண்டும்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை சீரழிக்கும் முக்கியமான கூறுகளில் ஒன்று டாஸ்மார்க். மதுவுக்கு அடிமையானால் அதனால் தனிப்பட்ட பாதிப்பு என்னவென்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதனால் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய சீரழிவு என்பதில் ஒரு சிலவற்றை காண்போம்.

  • குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் தமிழ்நாட்டில் சாலை விபத்தால் உயிர் இழப்பவர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் கூடிக்கொண்டே இருக்கிறது.
  • கொலை, கற்பழிப்பு, (குழந்தைகளைகளை கூட விட்டுவைப்பதில்லை இந்த குடிகார கயவர்கள்) போன்ற கொடூரங்கள் நிகழ்வதற்கு மது ஒரு தூண்டுதலாக இருக்கிறது.
  • நிறைய குடும்பங்கள் பொருளாதார வீழ்ச்சியடைந்து நடுத்தெருவுக்கு வருவதற்கு மது ஒரு காரணம்.
  • குடும்ப உறவுகள் சீரழிந்து போவதற்கு மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.
  • பல பெண்கள் தங்கள் குடிகார கணவன்களால் குழந்தைகளைக்கூட கவனிப்பதற்கு நேரம் ஒதுக்கமுடியாமல் எவ்வளவு மோசமான சூழ்நிலைகளிலும் கூட வேலை பார்க்கிறார்கள்.
  • இதுபோக உடல்நலம் பாதிக்கப்படுதல்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவந்தால்தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கமுடியம்.

சில அரசியல் தலைவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்துவோம் என்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியும் இப்போதைக்கு தாங்கள் ஆட்சிக்கு வரமுடியாது என்று. எனவே தைரியமாக சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெரிய அரசியல் தலைவர்கள் பூரண மதுவிலக்குபற்றி ஒரு அறிக்கையாவது கொடுக்கிறார்களா? கண்டிப்பாக கொடுக்கமாட்டார்கள். ஏனெனில் அந்த இரண்டு பெரிய கட்சிகளின் சில பிரமுகர்களிடம் இருந்துதான் மது கொள்முதல் செய்யப்படுகிறது. டாஸ்மார்க் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் நம்முடைய அரசால் நிறைய திட்டங்களுக்கு செலவு செய்யமுடிகிறது என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள். அறிவுள்ள, பொறுப்புள்ள, மக்களின் நலனில் அக்கறை உள்ள, திறமையான படித்த மந்திரிகளை தேர்ந்தெடுங்கள். அவர்கள் நல்ல முறைகளில் வழி வகை செய்வார்கள் அரசாங்க வருமானத்திற்கு.

இதில் நம்முடைய பங்கு என்ன?

எவ்வளவோ செய்யலாம் நாம் நினைத்தால். அரசியல்வாதிகள் கூட்டத்தைதான் நம்பியிருக்கிறார்கள். சமூகவளைதலங்களில் இல்லாத கூட்டமா? நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், எவ்வளவோ தகவல்களை நாம் பகிர்ந்துகொள்கிறோம். நிறைய சாலை விபத்துக்கள் புகைப்படங்களை நாம் பகிர்ந்து கொள்வதால் என்ன பிரயோஜனம்? உண்மையிலேயே நமக்கு அந்த விபத்துகளால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்துவிட்ட குடும்பங்களின் மேல் அக்கறை இருந்தால் தமிழ்நாட்டில் மது விலக்கு அமுல்படுத்துவதில் கொஞ்சமாவது குரல் கொடுக்கலாமே? குழந்தைகள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும்போது சும்மா நெஞ்சம் பதறுவதால் என்ன நன்மை. அதை எதிர்த்து குரல் கொடுத்தால் மட்டும் போதுமா? அதனுடைய மூல ஆதாரத்தை வேரோடு புடுங்கி எறிய நாம் என்ன செய்தோம்?

தைரியமாக குரல் கொடுப்போம் “பூரண மதுவிலக்கை கொண்டுவரும் கட்சியையே நாங்கள் அடுத்த அரசு அமைவதற்கு தேர்ந்தெடுப்போம் என்று.

இப்பொழுது ஆரம்பித்து நம்முடைய நண்பர்களுக்கெல்லாம் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுங்கள். கோடிக்கணக்கானவர்களை இந்த தகவல் சென்று சேரட்டும். தமிழ்நாட்டு மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்று அரசியல் தலைவர்கள் தெரிந்து கொள்ளட்டும். அப்பொழுதுதான் தங்களுடைய அடுத்த தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை பற்றி உறுதி கொடுப்பார்கள்.

நம்மால் இதை நிகழ்த்த முடியுமா என்று நினைக்காதீர்கள்.

நாங்கள் விதை போட்டுவிட்டோம்,

கண்டிப்பாக சில நண்பர்கள் தண்ணீர் ஊற்றுவார்கள்,

சிலர் உரம் போடுவார்கள்,

இது விருட்சமாக உருவெடுக்கும் என்று நம்புகிறோம்.

 

Share This Post