மலரும் மனமும்

மலரும் மனமும்

மலரும் மனமும்:

எங்களுடைய நிறமும் குணமும் படைப்புக்கு நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தீர்கள். அதனால் அடுத்ததாக இப்பொழுது மலரும் மனமும் என்ற தலைப்பில் மனம் சொன்னதை கேட்டு எழுதி இருக்கிறோம். இதில் உங்களுக்கு பிடித்த மலரை தேர்ந்து எடுத்து படியுங்கள். நீங்கள் தலையில் அடிக்கடி வைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. சும்மா பிடித்து இருந்தால் போதும். எனவே ஆண், பெண் இருவரும் உங்களுக்கு பிடித்த மலருக்கு உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். அவசரப்பட்டு தேர்ந்து எடுக்காதீர்கள். உண்மையிலேயே பிடித்த மலரை தேர்ந்து எடுங்கள்.

ரோஜா:

ஒரு ஒழுங்கும் நேர்த்தியும் உங்கள் நடத்தையில் இருக்கும். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் எல்லோரையும் யோசிக்க வைத்துவிடுவீர்கள். மற்றவர்களை சத்தம் இல்லாமல் கவனிப்பீர்கள், உங்களுக்கு தெரியாமல் உங்களை கவனிப்பவர்களை எளிதில் கண்டுகொண்டுகொள்வீர்கள். இரக்க குணம் உங்களுடைய வீக் பாய்ன்ட். கொஞ்சம் இல்லை அதிக அழுத்தம் உள்ள ஆள் நீங்கள். உங்களுடைய உடன் பிறந்தவர்களுக்கோ, நண்பர்களுக்கோ ஏன் உங்களுடைய பெற்றோர்களுக்கோ கூட உங்களுடைய் உண்மையான குணம் தெரியாது, எல்லோருடைய பிரச்சனையையும் நீங்கள் கேட்பீர்கள், ஆனால் உங்களுடைய பிரச்னையை பற்றி மூச்சு விடமாட்டீர்கள். எதிலும் நியாயமாக பேசுவீர்கள், பஞ்சாயத்து பண்ணுவதில் வல்லவர். ஆசிரியராகவோ அல்லது நீதிபதியாகவோ போகலாம். நீங்கள் இருக்கும் இடத்தை சுற்றி உங்களுக்கான உலகத்தை எளிதில் படைத்து விடுவீர்கள். எதிலும் நோகாமல் நொங்கு எடுப்பதில் வல்லவர். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர், ஆனால் ஒரு துளி கண்ணீர் கூட வெளியில் காட்டக்கூடாது என்று போராடுவீர்கள். ஒரு சிலருடன்தான் நெருக்கமாக பழகுவீர்கள். அவர்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள்தான். மொத்தத்தில் நீங்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்தான். உங்களுடைய துணை மிகவும் கொடுத்து வைத்தவர் உங்களைவிட அவர்களை யாரும் இந்த அளவுக்கு ரசித்திருக்கமாட்டார்கள்.

மல்லிகை:

நீங்கள் நிஜமாகவே மிகவும் நல்லவர்தான் பிறகு எதற்கு நல்லவர் என்று வெளிக்காட்டிக்கொள்ள போராடுகிறீர்கள்? மனசு முழுக்க அன்பு நிறைந்து இருக்கும், ஆனால் அதை வெளிக்காட்டுவதில் நிறைய தடுமாறுவீர்கள். எப்பவும் உங்களை சுற்றி கூட்டம் இருக்கவேண்டும். நிறைய கோபம் வரும் ஆனால் நிமிடத்தில் காணாமல் போகும். கொஞ்சம் பழமைவாதி. ஒரு பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தால் சும்மா பம்பரமாக சுற்றிவருவீர்கள். நிறைவான வாழ்க்கைதான் உங்கள் லட்சியம் ஆனால் அது கிடைத்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் எப்பவும் ஒரு இனம் புரியாத பயம் இருந்துகொண்டே இருக்கும். காதல், நட்பு இரண்டையும் விட உங்கள் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் முகம் எளிதில் உங்களுடைய மனதில் இருப்பதை காட்டிகொடுத்துவிடும். சகோதரர்கள் இருந்தால் மிகவும் பாசமாக இருப்பீர்கள், சகோதரர்கள் இல்லை எனில் அதற்காக ஏங்குவீர்கள். மாடர்னாக மாறுவதில் எதற்கு தாமதம் ஏன் இந்த குழப்பம்? மொத்தத்தில் நீங்கள் எல்லாராலும் நேசிக்கத்தக்க அருமையான ஆள்தான்.  உங்களுடைய துணை மிகவும் பொசசிவ்வாக இருப்பார் உங்கள் மேல்.

பிச்சிப்பூ:

ரொம்ப தில்லானவர். காந்தம்னு சொல்லுவாங்களே அது நீங்கள்தான். யாரையும் எளிதில் உங்கள் பக்கம் இழுத்துவிடுவீர்கள். சும்மாவே இருக்கமாட்டீர்கள். சத்தம் இல்லாமல் சாகசம் பண்ணுவீர்கள், நீங்கள் என்ன பண்ணினாலும் யாரும் தப்பாகவே எடுத்துக்கொள்ளமாட்டார்கள். எதிலும் தரம் இருக்கவேண்டும் உங்களுக்கு. நிறைய பேருக்கு உங்களை பிடித்து இருந்தாலும் உங்களுக்கு பிடித்தவர்கள் ஒரு சிலர்தான். விலைமதிப்புள்ள பொருட்களும் ஆடைகளும் உங்களை ஈர்க்கும். மனதிற்குள் நிறைய கனவுகள் இருக்கும், ஆனால் அதை கனவாகவே வைத்துக்கொள்வீர்கள். எதையும் அடையும் வரை இருக்கும் உற்சாகம் அடைந்தபிறகு இருக்காது. உங்களுக்கு தெரியாமலேயே நிறைய பேர் வாழ்க்கையில் நீங்கள் சலனத்தை உண்டுபண்ணிவிடுவீர்கள். நீங்கள் ஈசியாக பேசிட்டு போய்விடுவீர்கள் ஆனால் உங்கள் பேச்சு நிறைய பேரை உண்டு இல்லை என்று பண்ணிவிடும். மொத்தத்தில் நீங்கள் மிகவும் பவர்புல்லான ஆள். உங்களுடைய துணை உங்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம்.

கனகாம்பரம்:

நீங்க மிகவும் விவரமானவரா அல்லது வெகுளித்தனமான ஆளா? ரொம்ப தெளிவா இருக்கிற மாதிரிதான் இருக்கும், ஆனால் நிறைய ஏமாறுவீர்கள். குழந்தை மனசு உங்களுக்கு. நல்லா வேடிக்கை பார்ப்பீர்கள். தெய்வபக்தி இருக்கும், ஆனால் அதில் எப்பவும் குழப்பம் வரும். எல்லா வயசுலேயும் நல்லா குறும்புத்தனம் பண்ணுவீர்கள். நீங்கள் நினைப்பதை தயங்காமல் போட்டு உடைப்பீர்கள். யாரு என்ன நினைச்சால் எனக்கென்ன என்று அடிக்கடி சொல்வீர்கள். உங்களை கவிழ்க்க யாரும் தேவை இல்லை, நீங்களே போதும். சினிமா மேல ஒரு கவர்ச்சி இருக்கும். கண்ணாடி பார்க்க மிகவும் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தவர்களிடம் மிகவும் உண்மையாய் இருப்பீர்கள். பிடிக்காதவர்களிடம் அவர்களால் உங்களுக்கு எவ்வளவுதான் காரியம் ஆகவேண்டும் என்றாலும் தூக்கி எரிந்து விடுவீர்கள். நீங்கள் கருப்பாக இருந்தாலும், சிவப்பாக இருந்தாலும் மிகவும் களையாக இருப்பீர்கள். மொத்தத்தில் நீங்கள் விவரமாக உங்களை நினைத்துகொண்டு இருக்கும் வெகுளியான ஆள்தான்.  உங்களுடைய துணை உங்களை  மிகவும்அப்பாவி என்று நினைப்பாங்க.

தாமரை:

எதிலும் ரிஸ்க் எடுக்க தயங்காதவர். பத்தோடு பதினொன்றாக இருக்க ஆசைப்படமாட்டீர்கள். எதிலும் நம்பர் ஒன்றாக இருக்கவேண்டும் உங்களுக்கு. கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்றவற்றை மீறுவது பிடிக்கும். எல்லாரும் நூறு கோணத்தில் பார்த்தால் நீங்கள் நூத்தி ஒன்றாவது கோணத்தில் பார்ப்பீர்கள், எதையும் அடி ஆழம் வரை பார்க்காமல் விடமாட்டீர்கள். ஒரு பைசா கூட தேறாது என்றாலும் முன் வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். ரொம்ப பிடிவாத குணம் உண்டு. ஆனால் அது உங்களுக்கு நிறைய கொடுத்து இருக்கும். பெரிய பெரிய வேலைகளை உங்களை நம்பி தாராளமாக கொடுக்கலாம். நீங்கள் என்ஜீனியராக இருந்தால் சாதனை செய்வீர்கள். அடிவிழுந்தாலும் மிக உயரத்தில் இருந்து விழவேண்டும் என்று நினைப்பீர்கள். மேற்கு இந்திய நாடுகளின் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். காதல் உங்களுக்கு ஒத்துவராது. மொத்தத்தில் நீங்கள் சாதிக்கப்பிறந்தவர். உங்களுடைய துணை எப்போதும் உங்களை பற்றி எல்லோரிடமும் பெருமையாக பேசுவார்கள்.

சூரியகாந்தி:

அழகானவர் நீங்கள். அழகை மிகவும் விரும்புவீர்கள். நிறைய விஷயங்கள் உங்களிடம் இருக்கும். ஆனால் அதை வெட்டியாக உபயோகப்படுத்துவீர்கள். எதுவும் உங்களை தேடி வரவேண்டும் என்று விரும்புவீர்கள். அடிக்கடி ஓய்வு தேடி போய்விடுவீர்கள். ரொம்ப பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஆசைப்படுவீர்கள். குடும்ப வாழ்வில் ரொம்ப அலட்டிக்கொள்ளமாட்டீர்கள். நண்பர்கள் ரொம்ப பிடிக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்ப்பது பிடிக்காது. விருப்பம் இருந்தால் மட்டும் செய்வீர்கள். உங்களுடைய தேவைகள் ரொம்ப குறைவு. கொஞ்சம் சதை போட்டு இருப்பீர்கள். நல்லா வகை வகையான உணவு பிடிக்கும். மதுபானங்களில் விருப்பம் இருக்கும். சின்ன, சின்ன தப்புக்கள் பிடிக்கும். வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர். மொத்தத்தில் நீங்கள் ஒரு எதற்கும் அலட்டிக்கொள்ளாத ஆள். உங்களுடைய துணைக்கு நீங்கள் தான் உலகம்.

பின்குறிப்பு:

நாங்கள் எப்படி இதை கணித்து இருக்கிறோம் என்று யோசிக்காமல், எப்படி இருக்கிறது என்று விமர்சனம் செய்யுங்கள். நன்றாக இருந்தால் லைக் போடுங்கள், மிக பொருத்தமாக இருந்தால் ஷேர் செய்யுங்கள். குப்பையாக இருந்தால் கூட்டி தள்ளுங்கள். மிக விரைவில் அடுத்த கணிப்புடன் உங்கள் கணினிக்கு வருகிறோம்.

 

Share This Post