வாலியைப் படியுங்கள்….

வாலியைப் படியுங்கள்….

கவிஞர் வாலியைப் பற்றி நாங்கள் தமிழ் தெரிந்தவர்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. கவிதைகளில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும், இப்பொழுதுதான் கவிதைகள் படிக்க ஆரம்பித்தவர்களுக்கும் மற்றும் தமிழுக்குப் புதியவர்களுக்கும் வாலியின் கவிதைகளிலிருந்து ஓரிரு சுவையான வரிகளை பகிர்ந்து கொள்வதில் உவகை கொள்கிறோம்.

திரைப்படங்களில் வாலியின் இளமையை, அவருடைய ஆளுமையை, தமிழின் வளமையை நம்மில் பெரும்பாலும் உண்டிருப்போம், உணர்ந்திருப்போம். திரைப்படத்திற்கு வெளியே அவரது படைப்புகள் அளவற்றது. அதில் ஒருசில வரிகளைப் பருகுவோம், கொஞ்சம் உருகுவோம்…

வாலியின் எளிய நடைக்கு ஒரு எளிமையான உதாரணத்தைப் பாருங்கள்,

எறும்பைவிடச் சின்னது

   எது?

   எறும்பைவிடச் சின்னது

   அது தின்னது…

அமெரிக்க அதிபர் ஒபாமாவைப்பற்றி ஒரு விஷயம் கேள்விப்படுகிறார் வாலி, அதாவது ஒபாமாவின் சட்டைப்பையில் எப்போதும் ஒரு சிறிய அனுமன் சிலை வைத்திருக்கிறாராம். அதைப்பற்றி அழகாக வர்ணிக்கிறார்,

கறுப்புக்குப் பிறந்தவன்

   பையில்

   காற்றுக்குப் பிறந்தவன்…

   குஜராத் நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களைப்பற்றி உருக்கமாக சொல்கிறார்,

இவர்கள் கண் மூடியதால்

   மண் மூடியவர்கள் அல்ல

   மண் மூடியதால்

   கண் மூடியவர்கள்…

கும்பகோணம் கொடிய தீ விபத்தப் பற்றி நெஞ்சம் கொதித்து எழுதுகிறார்.

கோயில்கள் அதிகம் உள்ள ஊர்

   குடந்தை

   அங்கு நடந்த

   இந்த கோர நிகழ்ச்சிக்கு

   அங்கு குடிகொண்டிருக்கும்

   தெய்வங்கள் அத்தனையும்

   உடந்தை…

சீதை ராவணனுக்கு எச்சரிக்கை செய்யும்போது,

என்

   இறைவனுக்கு

   நான்

   இருக்குமிடம் தெரியாது!

   தெரிந்தால் –அதன்பின்

   நீ

   இருக்குமிடம் தெரியாது…

ராவணன் சீதையை இலங்கைக்கு கொண்டுசென்றவுடன் சீதை கொதித்தெழுந்து சொல்கிறாள்,

கற்புக்கடலைக்

கவர்ந்து வந்து – நான்கு

உப்புக்கடல் நடுவே

ஒளித்து வைத்திருக்கும்

தப்புக் கடலே…  

என்கிறார்.

ராவணன் அனுமனின் வாலில் தீவைத்தவுடன் அதைப்பற்றி கிண்டலாக

அரக்கர் கோமான்

அற்பக் குரங்கென்று அதன் வாலில்

தீவைத்தான்! – அது

கொளுத்தியதோ அவனாண்ட

தீவைத்தான்….!

கண்ணதாசனின் இறப்பைப் பற்றி வருந்தி எழுதும்போது,

மகாகவி கண்ணதாசனின்

மரணத்திற்குக் காரணம்

மதுவருந்தியது – இது தெரிந்து

மது வருந்தியது!

சிலப்பதிகாரத்தில் கோவலனைப்பற்றி குறிப்பிடும்பொழுது

புகாரில் பிறந்தவன்

புகாரில் இறந்தவன்!

புகழுக்கு வந்தவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற கேள்விக்கு,

அடக்கமாகும் வரை

அடக்கமாக இரு…

என்று அடக்கமாக கூறுகிறார்.

இப்படி சொல்லிகொண்டே போகலாம். நல்ல புத்தகங்கள், நல்ல கவிதைகளை எல்லாரும் படிக்கவேண்டும். நம்முடைய இந்த தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் நாம்தான் வாலி போன்ற மிகப் பெரிய கவிஞர்களை அறிமுகம் செய்யவேண்டும். அவர்கள் ஒருமுறை சுவைத்தால் பிறகு தமிழ் இலக்கியங்களை விரும்பி படிக்க ஆரம்பிப்பார்கள், தமிழ் என்றும் இளமையோடு இருக்கும்.

Share This Post