வே…..க…..ம்……!

வே…..க…..ம்……!

இன்றைய உலகில் நாம் அனைவரும் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் வேகம். எங்கும் வேகம் எதிலும் வேகம். சமைப்பதிலிருந்து சலூன்கடைவரை, தினசரியிலிருந்து தின்பதுவரை எல்லாமே வேகம்தான். உயிர் போகுற அவசரமா என்று ஆரம்பித்து உயிரைப் போக்குகிற அவசரமாகிவிட்டது இன்றைய உலகம். அப்படி உயிரைப் பறிக்கிற ஒரு விஷயம்தான் வாகனத்தில் பறப்பது. அதிலும் இருசக்கரவாகனத்தில் பறக்கிரவர்களுக்குத்தான் இந்த கட்டுரையே.

சமீபத்தில் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு பகுதிக்குச் சென்றோம். அங்கே 20 வயது முதல் 30 வயதுவரை உள்ள இளைஞர்கள் பலர் கை உடைந்து கால் உடைந்து கிடந்தார்கள். பெரும்பாலும் இருசக்கர வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள். அருகில் அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது மனைவி கண்ணீருடன் புலம்பினர். எவ்வளவு கனவுகள்? எவ்வளவு நம்பிக்கைகள்? எல்லாம் போச்சு! காரணம் வேகம். சிலர் வாகனத்தை வேகமாக ஓட்டி அடிபட்டிருக்கிறார்கள். சிலர் வேகமாக வந்தவர்களால் அடிபட்டிருக்கிறார்கள். உயிரைப்பறிக்கிற வேகத்தில் செல்பவர்களுக்கு ஒரு சில அறிவுரைகள்(!) கொடுத்து இருக்கிறோம் தயவுசெய்து படியுங்கள்.

  • நீங்கள் வேகமாக டூவீலர் ஓட்டுவதில் திறமையானவர் என்றால் பந்தைய மைதானத்தில் உங்கள் திறமையை காட்டலாமே… பப்ளிக்க எதுக்கு தொந்தரவு செய்றீங்க?
  • உங்கள் உயிர் ஒரு மயிருக்கும் (மன்னிக்கவும்-இது பாதிக்கப்பட்டவர்களின் மனக்குமுறலில் வந்த வார்த்தை) உதவாது என்று நீங்கள் முடிவு எடுத்ததை நாங்கள் குறை சொல்லமாட்டோம், அது உங்கள் சொந்த பிரச்சனை. ஆனால் நீங்கள் விபத்தை ஏற்படுத்தும்போது பல அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகிறார்களே அதற்கு நீங்கள்தான் முழுப்பொறுப்பு.
  • நீங்கள் பிரதம மந்திரியோ, நாட்டின் பாதுகாவலரோ, இதய மாற்று அறுவை சிகச்சைக்கு ஒரு இதயத்தை எடுத்துச் செல்லும் ஒரு வாகனத்தின் ஓட்டுநரோ, குறைந்தபட்சம் ஒரு மருத்துவரோ கூட கிடையாது வேகமாக சென்று தலைமேல் வேலை இருக்கிறது உடனே பார்க்கவேண்டும் என்று பறப்பதற்கு. வெட்டிவேலை பார்க்கிறவரோ அல்லது கண்டிப்பாக சீன் போடுகிறவராகத்தான் இருப்பீர்கள் என்பது உலகம் அறிந்த ஒன்று.
  • நீங்கள் செத்தால் அழுவதற்கு நாதி இருக்குமானு தெரியாது, ஆனால் உங்களால் பாதிக்கப்பட்டவர் சாதாரண தினசரி கூலிவாங்கும் தொழிலாளியாக இருந்தாலும் நிறைய அன்பு உள்ளங்களை சேர்த்துவைத்திருப்பார், அவருக்காக கண்ணீர் சிந்துவதற்கு.
  • உங்களுடைய வேகத்தால் நிறைய குடும்பங்களின் வாழ்க்கை ஆதாரமே செத்துப்போய் தெருவுக்கு வருவது உங்களுக்கு தெரியுமா? தெருநாய்க்குத் தெரிந்தால் அதுகூட தன்னை மாற்றிக்கொள்ளும், நீங்கள் மாறுவீர்களா?
  • யாருக்கு நிரூபிக்கப்போகிறீர்கள் உங்கள் திறமையை? 18 வயது இளம்பெண்களுக்கா? இது ஒரு லட்சியமா? மங்கள்யானுக்கு சாட்டிலைட் விட்ட விஞ்ஞானிகள் குழுவில் நீங்கள் இருந்தால் எந்தப்பொண்ணும் உங்களிடம் மங்கல நாண் சூடிகொள்ள வருவாள். உங்களுடைய வேகத்தை மட்டும்ப பார்த்து வருபவள் மங்கலத்தை இழந்துதான் நிற்பாள்.
  • இதுல குடித்துவிட்டும் செல்போனில் பேசிக்கொண்டும் வாகனம் ஓட்டும் மாக்கள்?! மாக்கள் என்றால் விலங்குகள் என்று நிதானத்தில் இருப்பவர்களுக்கு தெரியும். நீங்கள் என்ன பெரிய அஷ்டாவதானியா? ஒரு வேலையை மட்டும் கொடுத்தாலே ஒழுங்காக செய்ய வக்கில்லாதவர்கள் வாகனம் ஓட்டும்போது எழுபத்தி எட்டு வேலைகள் செய்வது? ஒருத்தனுக்கு எந்திச்சே நிக்க முடியலாம், அவனுக்கு எழுபத்திஎட்டு பொண்டாட்டி கேக்குதாம்?!

கொஞ்சம்(!) கடினமாக விமர்சித்துவிட்டோம்னு நினைக்கிறோம். மன்னிக்கவும் நீங்கள் ஒரு நாள் விபத்து சிகிச்சை பிரிவில் இருந்து அங்கே பாதிக்கப்பட்டவர்களின் சோக கதைகளை கேளுங்கள். உங்கள் வாகனத்தின் வேகத்தை உங்களை அறியாமலேயே குறைத்துவிடுவீர்கள்.

Share This Post